திருச்சியில் மாநில துப்பாக்கி சுடும் போட்டி : அஜித் பங்கேற்பு
திருச்சியில் நடக்கும் மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்றுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். சினிமாவை தாண்டி பைக், கார் ரைஸில் ஆர்வம் மிக்கவர். போட்டோகிராபி, டிரோன் தயாரிப்பு போன்றவற்றிலும் தனது பங்களிப்பை வெளிப்படுத்தினார். கடந்த சில ஆண்டுகளா துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று வருகிறார். முறையாக பயிற்சி எடுத்து மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபின் கிளப் சார்பில் 47வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 24ம் தேதி துவங்கியது. வரும் 31ம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில், 16 வயது சபியுத், 19 வயது யூத், 21 வயது ஜூனியர், 21 முதல் 45 வயது வரையிலான சீனியர், 45 முதல் 60 வயது வரையிலான சீனியர் மாஸ்டர்களுக்கான போட்டியில், 1,200 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் தொலைவுக்கு என 3 பிரிவுகளில் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெறுகிறது. ஓய்வு பெற்ற டிஜிபிக்கள் விஜயகுமார் தமிழ்ச்செல்வன் போன்றோர் பங்கேற்றனர்.
நடிகர் அஜித் பங்கேற்பு
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக கார் மூலம் திருச்சி வந்தார் நடிகர் அஜித். இன்று காலை ரைபிள் கிளப்புக்குச் சென்ற நடிகர் அஜித், சீனியர் மாஸ்டர் பிரிவு போட்டியில் கலந்து கொண்டு இலக்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இவர், 3 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். முன்னதாக போட்டிக்கு செல்லும் முன் வெளியில் பார்வையாளர்களை நோக்கி வெற்றி சின்னமான தம்ஸ் அப்பை காட்டி விட்டு சென்றார். அஜித் திருச்சி, துப்பாக்கி சுடும் போட்டிக்கு வந்த போட்டோ, வீடியோக்கள் வைரலாகின.