சென்னை: தமிழக முன்னாள் டிஜிபி ஜாபர் சேட்டுக்கு, வீட்டு வசதி வாரிய நிலம் ஒதுக்கப்பட்ட வழக்கு தொடர்பாக, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
தமிழக காவல் துறையில் கடந்த 2006-2011 காலகட்டத்தில் உளவுத் துறை ஐஜியாக ஜாபர்சேட் இருந்தபோது, திருவான்மியூர் பகுதியில் தமிழக அரசின் வீட்டு வசதி வாரிய நிலம் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், அந்த நிலத்தில் வீடு கட்டாமல், சட்டத்துக்கு புறம்பாக வணிக வளாகம் கட்டப்பட்டதாக, 2011-ம் ஆண்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், 2007-2008 காலகட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிலம், ஜாபர் சேட்டுக்கு ஒதுக்கப்பட்டதாகவும், அந்த நிலத்தில் அவர் சட்டத்துக்கு புறம்பாக வணிக வளாகம் கட்டியதாகவும், மேலும், சட்டவிரோத வெளிநாட்டு பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத் துறையினர் 2020-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
ஜாபர் சேட்டுக்கு வீட்டு வசதி வாரிய நிலம் ஒதுக்கப்பட்ட காலகட்டத்தில், வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த, தற்போதைய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் விசாரணை நடத்த கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதையடுத்து அமலாக்கத் துறை விசாரணைக்கு, அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று ஆஜரானார். அவரிடம், வீட்டு வசதி வாரியத்தில் ஜாபர் சேட்டுக்கு சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு கேள்விகளை அமலாக்கத் துறையினர் எழுப்பினர்.
இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் ஜாபர் சேட் கடந்த மாதம் விசாரணைக்கு ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.