பூம்புகார் அருகே காவிரி ஆற்றில் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு 5 கிராம மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால் உபரிநீர் திறக்கப்பட்டு தண்ணீர் அதிகளவில் வருவதால், கொள்ளிடம், காவிரி ஆறுகளின் வழியே வங்கக் கடலுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே மேலையூர் – வாணகிரி செல்லும் சாலையில் காவிரி ஆற்றில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் மக்கள் போக்குவரத்துக்காக தற்காலிகமாக தரைப்பாலம் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் காவிரி ஆற்றில் கடைசி கதவணையிலிருந்து திடீரெனத் தண்ணீர் திறக்கப்பட்டதால், இந்த பாலம் தண்ணீரில் மூழ்கி சாலைவசதி துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாணகிரி, கீழப்பெரும்பள்ளம், ஏராம்பாளையம், உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமமக்கள் இந்த வழியாக செல்லமுடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர், சிலர் அதிகளவில் தண்ணீர் செல்வதை பொருட்படுத்தாமல் இருசக்கர வாகனத்தில் உயிரைப் பணயம் வைத்து ஆற்றை கடந்து செல்கின்றனர்.
இந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைகளுக்குச் செல்வோர் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் நவகிரக் கோயில்களில் ஒன்றான கேதுபகவான் வீற்றிருக்கும் கீழப்பெரும்பள்ளம் ஸ்ரீ நாகநாதசுவாமி தலத்துக்கு வரும் வெளியூர் பக்தர்களும் சாலைவசதி இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து மீண்டும் தற்காலிக பாலம் அமைக்கவேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.