புதுடெல்லி: இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பரவி வரும் நிலையில், இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க விரும்பும் நிறுவனங்கள் ஆகஸ்ட்10-ம் தேதிக்குள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
குரங்கு அம்மை நோய் பல ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இருந்து வருகிறது. எனினும் இப்போது வேகமாக பரவி வருகிறது. இதுவரை 78 நாடுகளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதம் பேர் ஐரோப்பிய நாடுகளையும் 25 சதவீதம் பேர் அமெரிக்காவையும் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த நோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஏற்கெனவே சில நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஆனாலும் இதுவரை செயல்திறன் மிக்க தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், கேரளாவில் 3 பேருக்கும் டெல்லியில் ஒருவருக்கும் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சின்னம்மை போல கொப்புளங்கள் ஏற்படும்.
இந்நிலையில், இந்நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், “குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புண்கள் குணமாகும் வரை மூடிய நிலையில் இருக்கவேண்டும்.
அதுவரை அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். மேலும் பாதுகாப்பு உடையின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதாரப் பணியாளர்கள், நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்கள் 21 நாட்களுக்கு தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்க விரும்புவோர் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அறிவித்துள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்க விரும்பும் அனுபவம் உள்ள நிறுவனங்களுடன் அது தொடர்பாக ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இதனிடையே, குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தினால் போதும் என்றும் கரோனா தடுப்பூசி போல அனைவருக்கும் தேவையில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.