வேலூர் : 2.65 லட்சம் மரக்கன்றுகள் இலவசம்! விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகத்தின் மொத்தப் பரப்பளவில் கிட்டத்தட்ட 24 சதவிகிதம் தான் பசுமை வனப்பரப்பாக உள்ளது. தேசிய வனக் கொள்கையின்படி, பசுமை வனப்பரப்பு 33 சதவிகிதம் வரை இருக்க வேண்டும். ஆகவே, தமிழகத்தில் பசுமை வனப்பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதம் உயர்த்துவதற்காக ‘தமிழ்நாடு பண்ணை நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வை இயக்கம்’ எனும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் தேக்கு, புங்கன், மலை வேம்பு, செம்மரம், பூவரசு உள்ளிட்ட 27 வகையான மரக்கன்றுகளை வனத்துறை நாற்றங்கால்களில் உற்பத்திச் செய்து வேளாண்மைத் துறை மூலம் விநியோகம் செய்யப்பட உள்ளன.

மரக்கன்று

இந்த மரக்கன்றுகள், அடுத்து வரும் வடகிழக்குப் பருவமழை காலத்தின்போது, விநியோகம் செய்வதற்காக வளர்க்கப்படுகிறது. வேலூர் மாவட்ட விவசாயிகள், தங்கள் வரப்பு ஓரங்களில் இவற்றை நடவு செய்வதாக இருந்தால் 50 மரக்கன்றுகளும், வயல் முழுவதும் நடவு செய்வதாக இருந்தால் 160 மரக்கன்றுகளும் இலவசமாக வழங்கப்படும் என வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஸ்டீபன் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக, வேலூர் மாவட்ட வேளாண்மைத் துறை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ‘‘மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண் உழவர் நலத்துறையின் ‘உழவன் செயலி’ மூலம் தங்கள் சர்வே எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றைக் கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட வயலை, தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர் ஆய்வு செய்து உரிய அனுமதி வழங்குவார். பின்னர், தங்களுக்கு தேவைப்படும் மரக்கன்றுகளை வனவியல் விரிவாக்க மைய நாற்றங்காலிலிருந்து பெற்று நடவு செய்து கொள்ளலாம். நன்றாக பராமரித்து வளர்க்கப்படும் மரக்கன்றுகளுக்குப் பராமரிப்புத் தொகையாக இரண்டாவது ஆண்டிலிருந்து மரக்கன்று ஒன்றுக்கு 7 ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

உழவன் செயலி

அதன்படி, இந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் வட்டாரம் வாரியாக வேலூருக்கு 22 ஆயிரம், கணியம்பாடிக்கு 32 ஆயிரம், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய 3 வட்டாரங்களுக்கும் தலா 49 ஆயிரம், காட்பாடிக்கு 34 ஆயிரம், பேரணாம்பட்டுக்கு 30 ஆயிரம் மரக்கன்றுகள் என மொத்தம் 2.65 லட்சம் மரக்கன்றுகள் விநியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் விநியோகம் செய்யத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கின்றன. எனவே, மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வமாக உள்ள விவசாயிகள், தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர் மற்றும் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு இலவசமாக மரக்கன்றுகள் பெற்றுப் பயன்பெறலாம்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.