லண்டன்,
இங்கிலாந்தில் புதிய பிரதமரை தேர்வு செய்யும் போட்டிக்கான காரசார விவாதத்தின் போது பேட்டி எடுத்து கொண்டிருந்த பெண் தொகுப்பாளர் மயங்கி விழுந்தார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 7ம் தேதி பதவி விலகினார். இதைத் தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வுக்கான களத்ததில் 11 பேர் இறங்கினர். தற்போது முன்னாள் நிதித்துறை மந்திரியும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் மட்டுமே எஞ்சி உள்ளனர்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இருவரும் பங்கேற்று காரசாரமாக விவாதித்து கொண்டிருந்த போது, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பெண் தொகுப்பாளர் கேத் மெக்கான் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனைக் கண்டதும் சுனக் தொகுப்பாளரை நோக்கி ஓடினார். அவரைத் தொடர்ந்து, டிரஸும் பெண் தொகுப்பாளர் அருகில் சென்று அவரை பரிசோதித்தனர். பிறகு, அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, நிகழ்ச்சியில் பாதியில் முடிந்து, நேரடி ஒளிபரப்பு ரத்து செய்யப்பட்டது.
தொகுப்பாளர் கேத் மெக்கான் நலமுடன் உள்ளார் என்பதை அறிந்ததில் நிம்மதிடைந்தேன்! என்று டுவிட்டரில்லிஸ் டிரஸ் பதிவிட்டுள்ளார்.