கர்நாடகா: தட்சிண கன்னடா மாவட்ட பா.ஜனதா பிரமுகர் படுகொலையில் சம்பந்தப்பட்ட 2 பேர் கைது!

பெங்களூரூ,

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே உள்ள நெட்டார் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் நெட்டார்(வயது 32). இவர் மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார்.

மேலும் இவர் அப்பகுதியில் சொந்தமாக கோழி இறைச்சி கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது அவரை 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்தனர்.

பின்னர் அவர்கள் தங்களிடம் இருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் பிரவீனை சரமாரியாக வெட்டினர். அவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த கொலை சம்பவம் பற்றிய தகவல் மாவட்டம் முழுவதும் காட்டுத்தீ போல பரவி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

பிரவீன் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நேற்று சுள்ளியாவில் பா.ஜனதாவினர், விசுவ இந்து பரிஷத் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுள்ளியா, கடபா, புத்தூர் தாலுகாக்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் புத்தூரில் இருந்து மங்களூரு நோக்கி சென்ற அரசு பஸ்சின் கண்ணாடிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீசி தாக்கி உடைத்தனர்.

புத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் வைத்து பிரவீனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதையடுத்து அவரது உடல், அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பிரவீனின் உடலை எடுத்துச் செல்ல முயன்றனர்.

இந்த சந்தர்ப்பத்தில் ஆம்புலன்சை நகர விடாமல் இந்து அமைப்பினர் சுற்றி வளைத்தனர். ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் கோஷமிட்டபடி இருந்தனர். மேலும் அவர்கள் சாலையில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள், கார்கள், ஸ்கூட்டர்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தினர். கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். போலீசார் மீதும், போலீஸ் வாகனங்கள் மீதும் கற்களை வீசி தாக்கினர். இதன்காரணமாக அங்கு வன்முறை வெடித்தது.

தொடர்ந்து பரபரப்பும், பதற்றமும் நிலவுவதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மங்களூரு போலீசார் இரண்டு நபர்களை இன்று கைது செய்தனர். முன்னதாக போலீஸ் விசாரணையில், 21 பேரிடம் சந்தேகத்தின் பெயரில் விசாரணைநடைபெற்றது. அவர்கள் அனைவரும் பி எப் ஐ மற்றும் எஸ் டி பி ஐ கட்சியைச் சார்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டுள்ள அவர்கள் இருவரும் உள்ளூர் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுவரை 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவற்றில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் கேரளாவை சேர்ந்த ஒரு வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது என்று தட்சன கன்னடா மாவட்ட எஸ்.பி தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.