செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்குபெற உள்ள போட்டியாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று முதல் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதன் துவக்க விழா இன்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன் முதலில் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் நடைபெறுகிறது என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.
இந்தப் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். இதனைத்தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் சென்னைக்கு விமான மூலம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே கேரளா, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், கர்நாடகா உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள் தங்களது வாழ்த்துகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமக்கு பிடித்த, மிகவும் விரும்பும் ஒரு உள்ளரங்க விளையாட்டு என்றால் அது செஸ் போட்டிதான் என்றும், அனைத்து செஸ் வீரர்களுக்கும் வாழ்த்துகள் எனவும் குறிப்பிட்டு செஸ் விளையாடும் புகைப்படம் ஒன்றையும் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
#ChessOlympiad2022 An indoor game I love the most … wishing all the chess minds the very best .. god bless. pic.twitter.com/nVZ8SU51va
— Rajinikanth (@rajinikanth) July 28, 2022