புதுடெல்லி: மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎப்) எழுச்சி தினத்தை முன்னிட்டு அதன் வீரர்களுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கடந்த 1939-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி சிஆர்பி (கிரவுன் ரெப்ரசன்டேடிவ் போலீஸ்) என்ற பெயரில் தொடங்கப்பட்ட படையே, நாடு விடுதலைக்குப் பிறகு சிஆர்பிஎப் என மாற்றப்பட்டது. நாட்டின் மிகப்பெரிய மத்திய போலீஸ் படையாக உள்ள சிஆர்பிஎப் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
சிஆர்பிஎப் படையின் 84-வது எழுச்சி நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சிஆர்பிஎப் தொடக்க நாளில் அதன் அனைத்து வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். இந்தப் படையானது அதன் தளராத தைரியம் மற்றும் உன்னதமாக சேவைக்காக தன்னை மேன்மைப்படுத்திக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு சவால்கள் அல்லது மனிதாபிமான சவால்களை எதிர்கொள்வதில் சிஆர்பிஎப்-ன் பங்கு பாராட்டுக்குரியது” என்று கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள செய்தியில், “நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்ளும் வகையில் வீரத்தின் வெற்றி மிகுந்த வரலாற்றை உருவாக்கியுள்ளது.சிஆர்பிஎப் எழுச்சி தினத்தில் அதன் வீரர்களை வாழ்த்துகிறேன். அவர்களின் நாட்டுக்கான சேவை, அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறேன்” என்று கூறியுள்ளார்.