44th Chess Olympiad in Chennai: இந்தியாவில் முதன்முறையாக நடைபெறவிருக்கும் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, தமிழ்நாட்டின் சென்னையில் இன்று மாபெரும் தொடக்க விழாவுடன் தொடங்குகிறது.
இப்போட்டியானது சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஷெரட்டன் மகாபலிபுரம் ரிசார்ட் மற்றும் கன்வென்ஷன் சென்டரில் நடத்தப்பட உள்ளது, இப்போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.
உலகெங்கும் உள்ள 180ற்கும் மேற்பட்ட நாடுகளின் பங்கேற்பாளர்களைக் கொண்ட இந்த போட்டியானது, இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறையாக நிகழவிருக்கிறது.
இந்த போட்டிக்கான விதிமுறைகள், புள்ளி வழங்கும் முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம்:
‘ஸ்விஸ்’ விதிமுறைப்படி நடக்கும் இந்த போட்டியில், ஒவ்வொரு அணிகளும் மொத்தம் 11 சுற்றுகள் விளையாட கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும், சமபலத்துடன் அதிக புள்ளிகளை பெரும் அணிகள் அடுத்தடுத்த சுற்றுகளில் போட்டியிடும் வகையில் அட்டவணை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆட்டத்தில் விளையாடும் அணிகளுக்குள்ளும் 5 பேர் பங்குகொள்வர்கள். இதில் ஒருவர் மாற்று வீரராக (ரிசர்வ்) இருப்பார். அணியின் கேப்டன் ஆடும் வீரராக இருக்க வேண்டும்.
முதல் நான்கு செஸ் போர்டுகளில் எந்த அணிகள் எதிர்கொள்ளவேண்டும் என்பதை அணி நிர்வாகம் முன்கூட்டியே வரிசைப்படுத்தி முடிவு செய்துவிட வேண்டும். கடைசி நேரத்தில் வரிசையை மாற்ற முடியாது.
ஆட்டத்தில் முதல் போர்டில் ஆடும் வீரருக்கு ஓய்வுநேரம் வரும்பொழுது, 2-வது வரிசை வீரர் முதல் போர்டில் ஆடவேண்டும். அந்த மாதிரியான சூழலில் மாற்று வீரர் 4-வது போர்டில் தான் விளையாட முடியும். எந்த காரணத்தை கொண்டும் மாற்று வீரர் முதல் 3 போர்டுகளில் ஆடக்கூடாது.
ஒரு ரவுண்டில் வெற்றிக்கு ஒரு புள்ளி, டிராவுக்கு அரை புள்ளி வழங்கப்படும். தோல்விக்கு புள்ளி கிடையாது. 4 வீரர்கள் ஆடும் ஆட்டத்தின் எந்த அணி அதிக புள்ளியில் வெற்றி பெறுகிறதோ அவர்களுக்கு 2 புள்ளி வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா 1½ மணி நேரம் ஒதுக்கப்படும். இதில் 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும்.
30-வது காய் நகர்த்தலுக்கு முன்பாக பரஸ்பரம் அடிப்படையில் டிராவில் முடித்துக் கொள்ள முடியாது. 11 சுற்றுகள் முடிவில் அதிக புள்ளி சேர்க்கும் அணிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும்.
ஒருவேளை இரு அணிகள் ஒரே புள்ளியில் இருந்தால், முந்தைய ஆட்டங்களில் யார் அதிகமாக வெற்றி பெற்றதோ அவற்றை கணக்கில் கொண்டு சாம்பியன் அணி தீர்மானிக்கப்படும்.
2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு வெள்ளிப்பதக்கமும், 3-வது இடத்தை பெறும் அணிக்கு வெண்கலப்பதக்கமும் வழங்கப்படும். இது தவிர டாப்-3 தனிநபருக்கும் பதக்கங்கள் உண்டு. இதற்கு ஒரே வரிசை போர்டில் விளையாடும் வீரர்களின் செயல்பாடு மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். இந்த பதக்கத்தை பெற ஒரு வீரர் குறைந்தது 8 ஆட்டங்களில் தன் திறமையை வெளிக்காட்ட வேண்டியது அவசியமாகும்.