சென்னை: சென்னை செஸ் ஒலிம்பியாட் சின்னத்திற்கு ‘தம்பி’ என்ற பெயர் வைத்தற்கான காரணத்தை முதல்வர் ஸ்டாலின் விளக்கியுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான சின்னத்திற்கு ‘தம்பி’ என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பெயரிட்டார். வெள்ளை வேட்டி, சட்டை போட்ட இந்த ‘தம்பி’ மூலம் செஸ் ஒலிம்பியாட் தொடரை நாடு முழுவதும் கொண்டு சேர்த்தது தமிழக அரசு.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் சின்னத்திற்கு ‘தம்பி’ என்ற பெயர் வைத்ததற்கான காரணத்தை முதல்வர் ஸ்டாலின் விளக்கியுள்ளார். இது குறித்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பேசிய அவர், “பேரறிஞர் அண்ணா அனைவரையும் தம்பி என்றே அழைப்பார். எனவேதான் செஸ் ஒலிம்பியாட் சின்னத்திற்கு தம்பி என்ற பெயர் வைத்தேன்” என்று தெரிவித்தார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் பேசும்போது, இந்தியாவின் செஸ் தலைநகரமாக சென்னை விளங்குகிறது என்ற முதல்வர் ஸ்டாலின், “செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைத்த பிரதமருக்கு நன்றி. இதுபோன்ற வாய்ப்புகளை தமிழகத்திற்கு தொடர்ந்து நீங்கள் அளிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். உரையின் முழு வடிவம்: “தமிழகத்திற்கு பிரதமர் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்க வேண்டும்” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு