பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்ட செய்தி ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது. அப்பொழுது சுஷாந்த் சிங் மரணத்திற்கு நீதி கேட்டு #SSR, #JusticeforSSR போன்ற ஹேஷ்டேகுகளை பலரும் ட்ரெண்டு செய்து வந்தனர். சுஷாந்த் சிங்கிற்காக தற்போது #BoycottFlipkart, என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். இதற்கான காரணம் என்ன தெரியுமா?
ஆன்லைன் ஷாப்பிங் என்பது மக்களுக்கு எளிதான ஒன்றாக மாறிவிட்டது. இதனால் உலகெங்கிலும் உள்ள ஆன்லைன் விற்பனை சந்தைகள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகின்றன. விற்பனைச் சந்தைகள் தங்களது தயாரிப்புகளை விளம்பரப்படுத்த புதிய விஷயங்களைப் புகுத்தி வருகின்றன. அப்படி இ-காமர்ஸ் ஜாம்பவான்களில் ஒன்றான பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் விற்கப்பட்ட ஒரு டி-ஷர்ட் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் அந்த டி-ஷர்ட்டில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் புகைப்படத்தைப் போட்டு அதில் “Depression is like drowning” (மன அழுத்தம் என்பது நீரில் மூழ்குவதைப் போன்றது) என்னும் வாசகம் எழுதப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் கோபமடைந்து பலரும் அவர்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
சுஷாந்தின் மரணம் குறித்து காவல்துறை தரப்பில் எந்த ஒரு சரியான தகவலும் வராத நிலையில் அவர் மன அழுத்தத்தால் இறந்தார் என்பதை உறுதிப்படுத்துவதாக அந்த டி-ஷர்ட்டிலுள்ள வார்த்தைகள் உள்ளன எனப் பலரும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், சுஷாந்தை மன அழுத்தத்தை வைத்து அடையாளப்படுத்துவது தவறு என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #BoycottFlipkart என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டு செய்து வருவதால் தனது ரேட்டிங்கை இழந்திருக்கிறது பிளிப்கார்ட். ஆனால் இந்த விவகாரம் குறித்து பிளிப்கார்ட் நிறுவனம் இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ விளக்கமும் அளிக்கவில்லை.