நடிகர் தனுஷின் ‘வாத்தி’ பட டீசர் இன்று வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
‘தி கிரே மேன்’ படத்தைத் தொடர்ந்து, தமிழில் ‘வாத்தி’ என்றும், தெலுங்கில் ‘சார்’ என்றும் பெயரிடப்பட்டுள்ள படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இருமொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், மொட்டை ராஜேந்திரன், பிரவீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் ஆசிரியராக நடிக்கிறார்.
கல்வியை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவராகவும், மாஃபியா கும்பலை எதிர்த்து போராடுபவராகவும் நடிகர் தனுஷ் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் டீசர், இன்று வெளியாகியுள்ளது. அதில் ஜீரோ பீஸ், ஜீரோ எஜூகேஷன் வசனத்துடன் படத்தின் டீசர் துவங்குகிறது. மிரட்டலான சண்டைக் காட்சிகள் டீசரில் இடம்பெற்றுள்ளன.