பார்த்தா சட்டர்ஜியின் அமைச்சர் பதவி பறிப்பு – மம்தா பானர்ஜி நடவடிக்கை

ஆசிரியர் நியமன முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பார்த்தா சட்டர்ஜி மேற்கு வங்க அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநில ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக கடந்த 22-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், மாநிலத் தலைநகர் கொல்கத்தாவின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து ரூ.21 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, நடிகை அர்பிதா முகர்ஜி ஆகியோர் கடந்த 23-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் 3 நாட்களுக்கு முன்பு அனுமதி வழங்கியது.

மேலும் ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.29 கோடி ரொக்கப் பணமும், 5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரூ.50 கோடி ரொக்கப் பணமும், 5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

image
இந்நிலையில் மேற்கு வங்க அமைச்சரவையில் இருந்து பார்த்தா சட்டர்ஜி நீக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொழில், வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, பொது நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை புனரமைப்பு துறை ஆகிய துறைகளில் இருந்து அவர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பார்த்தா சட்டர்ஜியை நீக்கி என்னுடைய கட்சி தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணியில் பல திட்டங்கள் உள்ளன. ஆனால், அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

முன்னதாக, திரிணமூல் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், பார்த்தா சாட்டர்ஜி கட்சிக்கும் கட்சியைச் சேர்ந்த அனைவருக்குமே அவமானம் ஏற்படுத்திவிட்டார் என்று விமர்சித்தார்.

இதையும் படிக்க: மேற்கு வங்க அமைச்சர் உதவியாளர் வீட்டில் மீண்டும் பெட்டி பெட்டியாக ரூ.29 கோடி பறிமுதல்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.