இடைநீக்கம் செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் 23 பேர், நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே நேற்று 50 மணி நேர தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கினர். இந்நிலையில் போராட்டம் நடத்தி வரும் எதிர்கட்சிகள் எம்பிக்களில் ஒருவரான டொலா சென், போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் எம்பிக்களுக்கு சூடான டீ- யை வழங்குகிறார். இந்நிலையில் இது தொடர்பாக டொலா சென் கூறுகையில் “ சிலர் சர்க்கரை கலந்து டீ குடிப்பார்கள். சிலர் பிளாக் டீ குடிப்பார்கள். மழை காரணமாக நேற்றைய தினத்தில் மக்களவையின் போர்டிகோவில் தஞ்சம் அடைந்தோம். மீண்டும் காந்தி சிலைக்கு முன்பு போராட்டம் நடத்தி வருகிறோம். எனக்கு குடும்ப பொருப்புகள் இல்லை என்பதால் இரவில் இங்கேயே தங்குகிறேன். இதில் 6 வயது குழந்தைக்கு தாயாக இருக்கும் மௌசம் நூர் மட்டும் இரவில் வீட்டுக்கு செல்வார். மீண்டும் அதி காலையில் இங்கே வந்துவிடுவார்” என்று அவர் கூறினார்
”போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒரு கூடாரம் அமைத்து தர எழுத்து பூர்வமாக கோரிக்கை வைத்தோம் ஆனால் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை” என்று அவர் தெரிவித்தார்.
”மேலும் காந்தி சிலை முன்பாக ”தந்தூரி சிக்கன்” சாப்பிட்டதாக பாஜக எம்பி குற்றம் சாட்டியிருப்பதை முற்றிலுமாக மறுக்கிறோம். எங்களுக்கு காந்திக்குமான உறவு தற்போது அதிகமாகி உள்ளது. இதை அரசு புரிந்துகொள்ளும்” என்று போராட்டம் நடத்தி வரும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி தெரிவித்துள்ளார். மேலும் கடுமையான கொசுக்கடியில் போராட்டம் நடத்தும் எம்பிக்கள் தவிப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களுக்கு கொசு விரட்டிகூட கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆளும் கட்சியின் எம்பிக்கள் போராட்டக்கார்களுடன் பேசுவதை தவிர்ப்பதாகவும், போராட்டம் நடைபெறும் இடத்தை தவிர்த்து வேறு வழியில் செல்வதாகவும் போராட்டம் நடத்தும் எம்பிக்கள் தெரிவித்துள்ளனர்.