நாகை அருகே பழைமையான கைலாசநாதர் கோயிலிலுள்ள செம்பியன் மகாதேவி சிலை போலியானது என்பது அம்பலமான நிலையில், வெளிநாட்டில் இருந்த மீட்கப்பட்ட சிலையை மீண்டும் கோயிலில் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், செம்பியன் மகாதேவி கிராமத்தில் சுமார் 1300 ஆண்டுகள் பழைமையான கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. சோழ வம்சத்தைச் சேர்ந்த செம்பியன் மகாதேவி தன் வாழ்நாளில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக கோயில் கலைகளை வளர்ப்பதில் தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வந்ததாக வரலாறு கூறுகிறது.
அதன்படி இவர், கைலாசநாதர் கோயில் அமைப்பதற்காக பலரிடம் நிலங்களை வாங்கி அவ்வூருக்கு, செம்பியன் மகாதேவி சதுர்வேதி மங்கலம் என பெயரிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய பல்வேறு சிறப்பு அம்சங்கள் மிக்க செம்பியன் மகாதேவிக்கென இவ்வாலயத்தில் தனி உலோக சிலை இருந்துள்ளதாம். விசேஷ நாட்களில் இந்த சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று மீண்டும் அவை பாதுகாப்பாக லாக்கரில் வைத்து பூட்டப்பட்டு தற்போது வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சோழப் பேரரசர் கந்தராதித்ய தேவரின் மனைவியான அரசி செம்பியன் மகாதேவி உலோக சிலை அமெரிக்காவிலுள்ள அருங்காட்சியத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ வம்சத்து ராணியான செம்பியன் மகாதேவி சிலை கடந்த 1929 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து திருடப்பட்டிருப்பது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதன்படி தற்போது கோயிலில் உள்ள செம்பியன் மகாதேவி சிலை போலியானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு களவு போய் இருப்பதாக கருதப்படும் இந்த சிலை குறித்து தற்போதைய தலைமுறையினருக்கு தெரியாத நிலையில், தற்பொழுது கோயில் உள்ள சிலையை வழிபட்டு வருகின்றனர். சுமார் 1000 வருடத்திற்கும் மேலான பழமையான உலோக சிலை, ராஜராஜ சோழனின் பாட்டியான செம்பியன் மகாதேவி சிலையை மீட்டு இக்கோயிலில் ஒப்படைக்கப்பட்ட வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM