மங்களூருவில் இளைஞர் ஒருவரை மர்மகும்பல் கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக பிரமுகர் கொல்லப்பட்ட அடுத்த சில தினங்களிலேயே இந்தக் கொலை நடந்திருப்பதால் இரு தரப்பினர் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மங்களூரு பிராந்தியம் அமைந்துள்ள தக்ஷின் கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் பிரவீன் நட்டாருவை கடந்த 26-ம் தேதி சிலர் வெட்டிக் கொலை செய்தனர். இந்த சம்பவம் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரவீனின் கொலையை கண்டித்து அங்கு ஊர்வலங்கள் நடைபெற்றன. இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்க அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள்ளாக, அதே மாவட்டத்தில் உள்ள சூரத்கல் பகுதியைச் சேர்ந்த முகமது ஃபாசில் (23) என்பவரை நேற்று மாலை ஒரு மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. அப்பகுதியில் இருந்த துணிக்கடையில் அவர் இருந்தபோது, காரில் வந்த மர்மநபர்கள் அவரை விரட்டி விரட்டி வெட்டிக் கொலை செய்தனர். பின்னர் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து தக்ஷின் கன்னடா மாவட்டத்தில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. பாஜக பிரமுகரின் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என ஒருதரப்பினர் கருதுவதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அசம்பாவிதச் சம்பவங்களை தவிர்ப்பதற்காக அங்கு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மங்களூரு காவல் ஆணையர் என்.சசிக்குமார் கூறுகையில், “கொலையாளிகளை பிடிக்க 5-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாஜக பிரமுகர் கொலைக்கும், இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை. மக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்” என்றார்.
முஸ்லிம்களுக்கு வேண்டுகோள்
இதனிடையே, பதற்றமான சூழல் நிலவுவதால் இன்று (வெள்ளிக்கிழமை) முஸ்லிம்கள் வீட்டில் வைத்தே தொழுகை நடத்துமாறு போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM