“ஆயிரம் மோடிகள் வந்தாலும் உங்கள் மாடல் எடுபடாது!" – கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி சாடல்

கர்நாடகாவில், பா.ஜ.க இளைஞரணி பிரமுகர் பிரவீன் நெட்டாரு என்பவர் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த செவ்வாய் இரவன்று, பா.ஜ.க பிரமுகர் பிரவீன் நெட்டாரு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்புகையில், அவரின் கடை அருகிலேயே அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவத்தையடுத்து பா.ஜ.க மற்றும் சங்பரிவார் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

பா.ஜ.க பிரமுகர் கொலை தொடர்பாக ஷபிக் பல்லேரே, ஜாகீர் சவனுரு ஆகிய இருவரை போலீஸ் நேற்று கைதுசெய்தது. அதே சமயம், கொலைசெய்யப்பட்ட பிரவீன் நெட்டாரு குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தருவதாக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பசவராஜ், “உத்தரப்பிரதேசத்தில் நிலவும் நிலைமைகளைக் கையாள சரியான முதல்வர் யோகி ஆதித்யநாத்தான். அதே போல் சூழ்நிலைக்குத் தேவைப்படும் பட்சத்தில், வகுப்புவாத வன்முறைகளைக் கட்டுப்படுத்த, யோகி மாடலைப் பின்பற்றுவேன். பா.ஜ.க பிரமுகரின் கொலையில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையும் வழங்கப்படும்” எனக் கூறியிருந்தார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி

இந்த நிலையில், யோகி மாடலை பயன்படுத்துவேன் என்ற பசவராஜின் கருத்துக்கு, முன்னாள் முதல்வர் குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்துப் பேசிய குமாரசாமி, “கர்நாடகாவில் யோகி மாடல் எடுபடாது. இதனால் மாநிலத்துக்குத்தான் பேரிழப்பு. மேலும், கர்நாடகாவுக்கு ஆயிரம் மோடிகள் வந்தாலும், அவர்களின் மாடல் இங்கு வேலை செய்யாது. ஒருவேளை அவர்களின் புல்டோசர் கலாசாரத்தை அவர்கள் கொண்டுவந்தால், மாநிலத்திலிருந்தே பா.ஜ.க பிடுங்கி எறியப்படும்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.