மத்தியப் பிரதேசத்தில் பள்ளி மாணவர்கள் 39 பேருக்கு ஒரே ஊசியை பயன்படுத்திய நர்சிங் மாணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் நகரில் உள்ள ஜெயின் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் தடுப்பூசி செலுத்துவதற்காக ஒரு தனியார் நர்சிங் கல்லூரி மாணவரான ஜிதேந்திர அஹிவார் என்பவரை மாவட்ட சுகாதார அலுவலகம் நியமித்திருந்தது.
அந்த நபரோ, ஒருமுறை பயன்படுத்திய ஊசியை மாற்றாமலேயே மற்ற மாணவர்களுக்கும் அதனை பயன்படுத்தி வந்தார். 39 மாணவர்களுக்கு ஊசி செலுத்தப்பட்ட பின்னரே, அங்கிருந்த பெற்றோர்கள் இதனை கவனித்தனர். பின்னர் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் அதற்கு அலட்சியமாக பதிலளித்த அந்த நபர், தனக்கு மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் ஒரு ஊசிதான் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, பள்ளி நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஜிதேந்திர அஹிவாரை நேற்று கைது செய்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட தடுப்பூசி அதிகாரியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM