44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடக்கவிழவுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை அதிமுக சார்பில் வரவேற்க அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழியனுப்ப ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடி இருவரையும் பேலன்ஸ் செய்திருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.
அதிமுகவில் ஜூன் இறுதி வாரத்தில் வீசத் தொடங்கிய சூறாவளி இன்னும் ஓயவில்லை. ஜூலை 11 ஆம் தேதி ஒரு பெரிய களேபரமே நடந்தது. அதிமுக பொதுக்குழுவில் இ.பி.எஸ் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதையடுத்து, நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையேயான சட்டப்போராட்டமும் தொடர்ந்து வருகிறது. இருவரும் மாறி மாறி எதிர் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி அறிவித்து அரசியல்போரைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இவர்களில் பிரதமர் மோடியின் ஆதரவு யாருக்கு என்ற கேள்விகளும் விவாதங்களும் தமிழக அரசியலில் நடந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில்தான், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருகிறார் என்ற அறிவிப்பு வெளியானது.
இதற்கு முன்பு பிரதமர் மோடி சென்னை வந்த போது எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்துக்கு சென்று மோடியை வரவேற்றார். அப்போது பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமியின் கைகளைப் பற்றி மகிழ்ச்சியுடன் பேசினார்.
அதனால், தற்போது அதிமுகவில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரும் பிரிந்து கிடக்கும் நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்க சென்னை வரும் மோடியை வரவேற்க அதிமுகவில் இருந்து யார் அனுமதிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைப்பதற்காக வியாழக்கிழமை சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி பாஜக தலைவர்களுடன் சென்று வரவேற்றார். இதனால், பிரதமரை சந்திப்பதில் இ.பி.எஸ் தனது போட்டியாளர் ஓ.பி.எஸ்-ஐ முந்திவிட்டதாகப் பார்க்கப்பட்டது.
அதிமுக தலைமைப் போராட்டம், அடுத்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தங்களின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில், சென்னையில் பிரதமரை சந்தித்து பேச, ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இரண்டு தலைவர்களும் நேரில் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வார தொடக்கத்தில் புதுடெல்லி சென்றிருந்த இ.பி.எஸ், பிரதமர் நரேந்திர மோடி பிசியாக இருந்ததால் பிரதமரை சந்திக்க முடியவில்லை.
சென்னையில் இருந்து புதுடெல்லி செல்லும் பிரதமர் வெள்ளிக்கிழமை ஓ.பி.எஸ்.சை சந்திப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் கலந்து கொண்டார். ஆனால், இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இருவரும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு அனைத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் முறையாக அழைப்பு வந்ததாகவும், ஆனால், அவர்கள் பங்கேற்காமல் விலகி இருக்க முடிவு செய்துள்ளதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். தமிழகத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான, பெருமைமிக்க மற்றும் ஆன்மீக கடந்த காலத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் திமுக அரசு உள்ளது என்றார்.
சென்னை வந்த பிரதமர் மோடி வியாழக்கிழமை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவை முடித்துக்கொண்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை சென்று இரவு தங்கினார். பாஜக தலைவர்கள் அண்ணமலை, சி.டி.ரவி, பொன். ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா ஆகியோர் சென்று பிரதமர் மோடியை சந்தித்தனர்.
பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அவர் டெல்லி செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.
சென்னை வந்த பிரதமர் மோடியை கூட்டணி கட்சியான அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி விமான நிலையம் சென்று வரவேற்றதால், ஓ.பி.எஸ்-ஐ முந்திவிட்டதாகப் பேசப்பட்ட நிலையில், பிரதமர் மோடி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு டெல்லி சென்றபோது ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை விமான நிலையம் வரை சென்று வழியனுப்பி வைத்துள்ளார்.
அதிமுக தலைமைப் போராட்டத்தில் பிரதமர் மோடியின் ஆதரவு ஓ.பிஎஸ்-க்கா அல்லது இ.பி.எஸ்-க்கா என்ற கேள்வி எழுந்த நிலையில், பிரதமர் மோடி தனது சென்னை வருகையின்போது அதிமுக சார்பில் வரவேற்க இ.பி.எஸ் வழியனுப்ப ஓ.பி.எஸ் என்று பேலன்ஸ் செய்துள்ளார். பிரதமர் மோடியை இ.பி.எஸ் வரவேற்றதும், ஒ.பி.எஸ் வழியனுப்பி வைத்ததும் கோலகலமாக நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“