இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கவும், தரமான அதிக சேமிப்பு திறன் கொண்ட பேட்டரிகளை உற்பத்தி செய்யவும், மத்திய அரசால் செயல்படுத்தப்படும் 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டத்தில் இந்தியாவின் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி, ஓலா எல்க்ட்ரிக் மற்றும் ராஜேஷ் எக்ஸ்போர்ட் ஆகிய நிறுவனங்கள் களம் இறங்குகின்றன.
இதன்படி, மேம்பட்ட வேதியியல் சேமிப்பு செல் பேட்டரிகளை தயாரிக்கும் தொழிலில் இந்த நிறுவனங்கள் ஈடுபடும். தரமான அதிக சேமிப்பு திறன் கொண்ட பேட்டரி உற்பத்தி தொழிலில் முதலீடு செய்ய பெரிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாகவும், அதனை ஊக்குவிப்பதின் மூலம் இந்தியா உலகளாவிய சிறந்த உற்பத்தி மையமாக உருவாகும் வாய்ப்பு ஏற்படும் என்றும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.