ராய்ப்பூர் : கால்நடை விவசாயிகளிடம் இருந்து பசுக்களின் கோமியத்தை கொள்முதல் செய்யும் திட்டத்தை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தொடங்கி வைத்துள்ளார். இந்தியாவிலேயே பசு கோமியம் கொள்முதல் செய்யும் முதல் மாநிலமாக சத்தீஸ்கர் மாநிலம் உருவெடுத்துள்ளது. கால்நடை விவசாயிகளிடம் இருந்து மாட்டு சாணத்தை வாங்குவதற்காக 2020ம் ஆண்டில் ‘கோதன் நியாய் யோஜனா’ திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது பசு கோமியம் கொள்முதல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி கால்நடை விவசாயிகளிடம் இருந்து ஒரு லிட்டர் கோமியம் ரூ. 4க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. பண்டிகையை முன்னிட்டு இந்த திட்டத்தை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தொடங்கி வைத்துள்ளார். கொள்முதல் செய்யப்படும் பசு கோமியம், உரம் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க சுய உதவிக்குழுக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதன்மூலம் கிடைக்கும் வருவாய் கால்நடை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். மாட்டு சாணம், கோமியம் விற்பனை மூலம் ஊரக பொருளாதாரம் மேம்பட்டு வருவதாக சத்தீஸ்கர் அரசு கூறியுள்ளது.