புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அவமதித்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று முடங்கின. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குடியரசுத் தலைவரிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பி உள்ளார்.
மேற்குவங்கத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடந்த 27-ம் தேதி டெல்லியில் பேட்டியளித்தபோது, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று முன்தினம் எதிரொலித்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா மன்னிப்புகோர வேண்டும் என்று பாஜக கூட்டணி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். இதனால் இரு அவைகளும் முடங்கின.
நாடாளுமன்றத்தில் நேற்றும் இந்தப் பிரச்சினை நீடித்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, அக்னிபாதைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பின. குடியரசுத் தலைவரை அவமதித்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா மன்னிப்பு கோர வேண்டும் என்று பாஜக கூட்டணி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
மக்களவையில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என இரு தரப்பினரும் கோஷம் எழுப்பினர். சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த கீர்த்தி சோலங்கி உறுப்பினர்களை, அமைதி காக்குமாறு பலமுறை கேட்டுக் கொண்டார். இருக்கைக்கு உறுப்பினர்கள் திரும்ப வேண்டும் என்று அவர் பலமுறை அறிவுறுத்தினார். எனினும் அமளி நீடித்ததால் அவை நடவடிக்கைகளை நண்பகல் 12 மணி வரை கீர்த்தி சோலங்கி ஒத்திவைத்தார். பின்னர் 12 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்ததால் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதேபோல் கடும் அமளியால் மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை கூடியபோது அமளி தொடர்ந்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இரு அவைகளும் வரும் திங்கள்கிழமை காலை கூட உள்ளன.
உண்ணாவிரதம் நிறைவு
இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் 50 மணி நேர உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டம் நேற்று 3-வது நாளை எட்டியது. நாடாளுமன்றத்தின் காந்தி சிலை அருகே திறந்தவெளியில் தொடங்கப்பட்ட இந்த போராட்டம் நேற்று முன்தினம் கனமழை பெய்தநிலையில், தற்காலிக கூடாரம் அமைக்க எம்.பி.க்கள் அனுமதி கோரினர். ஆனால் அனுமதி வழங்கப்படாததால், நாடாளுமன்ற பிரதான வாயிலுக்கு போராட்டக் களத்தை அவர்கள் மாற்றினர்.
இந்நிலையில் நேற்று பகல் வரை காந்தி சிலை முன்பாக அவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அவைகள் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தை முடித்துக் கொள்வதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அறிவித்தனர்.
இதனிடையே காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு நேற்று கடிதம் அனுப்பினார்.
அதில், ‘‘உங்களது பதவியை குறிப்பிடும்போது தவறுதலாக, தவறான வார்த்தையைப் பயன் படுத்தி விட்டேன். அதற்காக வருந்துகிறேன். வாய் தவறி பேசிவிட்டேன் என்று உறுதிபட கூறுகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன். எனது மன்னிப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.