உத்தரபிரதேசத்தில் பிட்புல் நாயால் மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள்ளாக, பஞ்சாபில் ஒரு சிறுவனின் காதை பிட்புல் நாய் கடித்து பிடுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்லி பான் கிராமத்தைச் சேர்ந்தவர் பகதூர் சிங். இவர் தனது மகன் டிக்குனை (13) இன்று காலை மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள கடைக்கு அழைத்துச் சென்றார்.
கடையில் பொருட்களை வாங்கிவிட்டு திரும்பி வரும் போது, அங்கிருந்த ஒரு வீட்டு வாசலில் பிட்புல் நாயை அதன் உரிமையாளர் சங்கிலியால் கட்டி கையில் பிடித்துக் கொண்டிருந்தார். இவர்களின் மோட்டார் சைக்கிள் வந்ததும், அந்த நாய் ஆக்ரோஷமாக குரைத்துள்ளது.
இதனால் நாயின் உரிமையாளர் அதன் சங்கிலியை இறுக்கிப் பிடித்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக சங்கிலி அவிழ்ந்து விடவே அந்த பிட்புல் நாய் வேகமாக வந்து பைக்கின் பின்புறம் அமர்ந்திருந்த சிறுவனை கடித்து இழுத்துப் போட்டது. பின்னர் அந்த சிறுவனை கடித்து குதறியது. உடனடியாக அந்த சிறுவனின் தந்தையும், நாயின் உரிமையாளரும் போராடி பிட்புல்லிடம் இருந்து சிறுவனை மீட்டனர். இதில் அந்த சிறுவனின் காது துண்டானது.
இதையடுத்து, அந்த சிறுவன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செ்யது விசாரணை நடத்தி வருகின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM