அனைவருக்கும் எளிதாக நீதி கிடைப்பது மிகவும் முக்கியம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அனைத்திந்திய மாவட்ட சட்ட சேவைகள் வழங்குநர்களின் முதல் கூட்டத்தின் துவக்க நாளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மக்களுக்கு நீதி கிடைப்பது எளிதாக இருக்க வேண்டும். அது எவ்வளவு எளிதானதாக இருக்க வேண்டும் என்றால் வாழ்வதுபோல், ஒரு தொழில் செய்வதுபோல் எளிதாக இருத்தல் அவசியம்” என்று கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இவ்விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் யு.யு.லலித், டி.ஒய். சந்திரசூட், சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதலில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா, “நமது தேசத்தின் பலமே நம் நாட்டின் இளைஞர்கள். உலகில் வாழும் இளைஞர்களில் ஐந்தில் ஒர் இளைஞர் இந்தியாவில் தான் வசிக்கிறார். ஆனாலும் நம் இளைஞர்கள் மத்தியில் திறன்வாய்ந்த பணியாளர்களின் பலம் குறைவாக உள்ளனர். வெறும் 3% இளைஞர்களே திறன்மிகு பணியாளர்களாக தேர்ந்து உள்ளனர். நாட்டில் திறன்சார் பயிற்சிகளை ஊக்குவித்து இந்த இடைவெளியை நாம் சீர் செய்ய வேண்டும்.
சட்ட உதவிகள் இருப்பது கூட தெரியாமல் நிறைய இளைஞர்கள் தவிக்கின்றனர். சட்ட விதிகள் குறித்து நிறைய பேருக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. அதை ஏற்படுத்த வேண்டும். இருந்தும் கூட இன்று நாம் மக்களின் வாயிலுக்கே நீதியை கொண்டு சேர்க்கிறோம் என்றால் அதற்காக உற்சாகம் மிக்க வழக்கறிஞர்கள், தேர்ந்த நீதிபதிகளுக்கு நாம் நன்றி சொல்லியே ஆகவேண்டும்” என்றார்.