மும்பை: “குஜராத்திகள், ராஜஸ்தானிகள் இல்லாவிட்டால் மும்பையில் பணமே இருக்காது” என்று மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
மும்பை அந்தேரியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கட்டிட திறப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் “மகாராஷ்டிராவில் குஜராத்தி, ராஜஸ்தானிகள் மட்டும் இல்லாவிட்டால் பணமே இருக்காது. அதுவும் குறிப்பாக மும்பை, தானேவில் பணமே இருக்காது” என்று பேசியிருந்தார்.
ராஜஸ்தானி, மார்வாரி மற்றும் குஜராத்தி சமூகத்தினரின் வியாபார பங்களிப்பை புகழ்ந்து பேசுகையில் ஆளுநர் கோஷியாரி இவ்வாறு கூறியிருந்தார்.
இச்சமூகத்தினரால் மகாராஷ்டிரா மட்டுமல்ல நேபாளம், மொரீசியஸ் என நிறைய நாடுகளும் பயன்பெறுவதாக அவர் கூறினார். குஜராத்திகள், ராஜஸ்தானிகள் எங்கு சென்றாலும் வியாபாரம் மட்டும் செய்வதில்லை. கூடவே பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு பெருந்தொகையைக் கொடுத்து உதவி செய்கின்றனர் என்றும் கூறினார்.
அவரது பேச்சுக்கு காங்கிரஸ், சிவ சேனா கட்சியைச் சேர்ந்த பலரும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். கடின உழைப்பாளிகளான மராட்டியர்களை ஆளுநர் கோஷியாரி அவமதித்துவிட்டதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் கூறியுள்ளார். ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் என்று சிவ சேனா கட்சியினர் குரல் எழுப்பி வருகின்றனர்.
மகாராஷ்டிரா ஆளுநராக பாஜக ஆதரவாளர் பகத் சிங் கோஷியாரி நியமிக்கப்பட்டதில் இருந்தே தொடர்ந்து மராட்டியர்கள் அவமதிக்கப்பட்டு வருகின்றனர் என்று சஞ்சய் ரவுத் கூறினார்.
காங்கிரஸ் பிரமுகர்களான ஜெய்ராம் ரமேஷ். சச்சின் சவந்த் ஆகியோர் ஆளுநர் பேச்சு அடங்கிய வீடியோவைப் பகிர்ந்து அவர் இவ்வாறு பேசியிருக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.