புதுச்சேரி: புதுச்சேரியில் அமைக்கப்பட்டு வரும் தியாகச்சுவரில் இருந்து சாவர்க்கர் பெயர் பலகையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சமூக அமைப்புகளைச் சேர்ந்த 60 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நாட்டின் 75-வது சுதந்திர தின பெருவிழாவையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் சக்ரா விஷன் இந்தியா அமைப்பு சார்பில் தியாகச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த தியாகச்சுவரில் கடந்த 27-ம் தேதி சாவர்க்கர் பெயர் பலகையை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதித்தார்.
“சாவர்க்கர் சுதந்திரப் போராட்டத்துக்கு எதிராக செயல்பட்டவர். அவருடைய பெயரை தியாகிகளின் பட்டியலில் சேர்த்து தியாகச் சுவரில் பெயர் பலகை பதித்தது கண்டனத்துக்குரியது” என்று பல்வேறு கட்சியினர், சமூக அமைப்பினர் தெரிவித்தனர். மேலும் தியாகச்சுவரில் இருந்து சாவர்க்கர் பெயர் பலகையை அகற்றும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்தனர்.
அதன்படி, இன்று பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்பினர் புஸ்ஸி வீதியில் உள்ள சின்னக்கடை மணிக்கூண்டு அருகே திரண்டனர். அங்கிருந்து தமிழர் களம் அமைப்பு செயலாளர் அழகர் தலைமையில், மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் மங்கையர் செல்வன், தி.க.தலைவர் சிவ.வீரமணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் வீரமோகன், மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள தியாகச்சுவரை நோக்கி புறப்பட்டனர்.
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் அருகே வந்தபோது அவர்களை போலீஸார் சாலையின் குறுக்கே பேரிகார்டு அமைத்து தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், துணைநிலை ஆளுநரை கண்டித்தும், சாவர்க்கர் பெயர் பலகையை அகற்ற கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
அப்போது சாவர்க்கர் படத்தையும், தியாகச்சுவரில் ஆளுநர் சாவர்க்கர் பெயர் பலகை வைக்கும் படத்தையும் தீயிட்டு எரித்தனர். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்பிக்கள் பக்தவச்சலம், வீரவல்லபன், இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான போலீஸார் கொளுத்தப்பட்ட படங்களை தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சித்தனர். அதற்குள் அவை எரிந்து சாம்பலாகின.
இதையடுத்து, போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை கைது செய்து கரிகுடோனில் அடைத்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.