டைனோசர்கள் காலத்தில் வாழ்ந்த உயிரினங்கள் ஏராளம். டைனோசர்கள் முற்றிலும் அழிந்தபோது அதோடு அழிந்த உயிரினங்களும் ஏராளம். டைனோசர்கள் காலத்தில் வாழ்ந்து அவற்றோடு அழிந்த உயிரினங்களின் படிமங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதா என அந்த மாணவி கேட்டாள்.
டாக்டர் ஜி.வி.ஆர்.பிரசாத் காலமேடு பகுதியில் டைனோசர்கள், ஆமைகள், முதலைகள் படிமங்கள் இருப்பதைக் கண்டறிந்தார். காலமேடு அரியலூரிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது.
நம் கோயில்களில் பல விதமான யாளிகளைப் பார்க்க முடிகிறது. யாளி என்பது டைனோசர் முக மற்றும் உடல் அமைப்புகளைக் கொண்ட சிலைகள். இவை பழைமையான கோயில்களில் அதிகம் உள்ளன. இந்தக் கோவில்கள் ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டிய பொக்கிஷங்கள். இவை நம் முன்னோர்களின் கட்டடக்கலை திறமையின் சான்றுகள். அந்தக் காலக்கணிதம் மற்றும் அறிவியல் முன்னேற்றத்தின் அடையாளங்கள். இங்கு நம் முன்னோர்கள் டைனோசர் போன்ற தோற்றம் உள்ள யாளிகளை அதிகம் வடிவமைத்துள்ளனர். இந்த டைனோசர் உருவ அமைப்பு அவர்களின் சிந்தனையில் எப்படித் தோன்றியிருக்கும் என்ற கேள்வி என் மனதில் அடிக்கடி தோன்றியது. இதன் பதிலுக்கான என் சிந்தனையைப் பகிர்கின்றேன்.
பல்லியைப் பார்த்த இவர்கள் அதன் பெரிய உருவத்தைக் கல்லில் வடிவமைத்தார்களா? இருக்க வாய்ப்பில்லை. சின்ன பூச்சிகள் மற்றும் வண்டுகள் அதிகம் நம்மைச் சுற்றி எவ்வளவோ உள்ளன. அவற்றின் பெரிய ராட்சச உருவத்தைக் கல்லில் நம் முன்னோர்கள் வடிவமைக்கவில்லை. மாறாகப் பல்லியை மட்டும் கல்லில் பெரிய உருவில் செய்ய அவர்களுக்கு எப்படி சிந்தனை வந்திருக்க முடியும்?
சரி டைனோசர் வடிவம் எப்படிதான் நம் முன்னோர்களின் மூளையில் உதித்திருக்கும். காவேரி ஆற்றுப் பகுதியைச் சுற்றியுள்ள திருச்சி மற்றும் கும்பகோணத்துக்கு இடைப்பட்ட பகுதிதான் அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகும். கங்கை கொண்ட சோழபுரத்துக்கு அருகில் டைனோசர் முட்டைகள் மற்றும் பற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இன்று வரை ஒரு டைனோசர் புதைபடிமம்கூட முழுமையாகக் கண்டெடுக்கப்படவில்லை. ஆனால். சோழர்கள் கட்டாயம் டைனோசர் படிமங்களைப் பார்த்திருக்க வேண்டும் என நான் நம்புகிறேன்.
அவர்கள் டைனோசரின் படிமங்களின் தலைப்பகுதி தனியாகவும் உடல் பாகங்களைத் தனித் தனியாகவும்தான் பார்த்திருக்க வேண்டும், வியந்திருக்க வேண்டும். முழு டைனோசரின் படிவத்தை அவர்கள் பார்க்கவில்லை என நான் நம்புகிறேன். அதனால் அவர்களுக்கு டைனோசர்கள் பற்றி பல்வேறு கற்பனைகளைத் தூண்டியிருக்க வேண்டும். அதனால் தலை ஒரு உயிரினமாகவும் உடல் வேறு ஒன்றினுடையதாகவும் இருக்குமாறு கற்பனையில் யாளியை. சிலைகளாக வடிவமைத்துள்ளனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தச் சிலைகளைப் பார்த்து மெய் மறந்திருக்க வேண்டும். பின் சோழர்களிடமிருந்து பாண்டியர்களும் சேரர்களும் டைனோசரின் வடிவத்தையும் அதன் பெரிய தோற்றத்தையும் கற்றிருக்க வேண்டும். பின் தமிழகம் எங்கும் டைனோசரின் வடிவமும் அதன் பெரிய தோற்றமும் கட்டடக் கலையின் அங்கங்களாக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் காவேரி படுகையின் மேற்பரப்பில் காணப்பட்ட நிறைய டைனோசர் புதைபடிமங்களை அவர்கள் கண்டெடுத்திருக்க வேண்டும். இந்தப் பகுதி நீர் வளம் நிறைந்த பகுதியாதலால் தண்ணீரின் ஓட்டத்தில் டைனோசர் புதைபடிமங்கள் சேதமடைந்திருக்க வேண்டும் அதனால்தான் இன்று நம்மால் ஒரு டைனோசர் புதைபடிமங்களையும் முழுமையாகக் கண்டெடுக்க முடியவில்லை.
மேலும், இந்தப் பகுதியில் எதாவது கோயிலில் டைனோசர் புதைபடிமங்களைச் சோழர்கள் பாதுகாப்பாக வைத்திருக்கவும் வாய்ப்புகள் அதிகம் எனக் கணிக்கின்றேன் எனப் பதிலளித்தேன். மகிழ்ச்சியுடன் அந்த மாணவி நன்றி கூறி விடைபெற்றாள்.
பெரிய நீர்நிலைகளின் அருகில் வாழ்பவர்கள் நிறைய சிப்பி மற்றும் நத்தை வகைகளைப் பார்த்திருக்க வாய்ப்புள்ளது. கடல், ஆறு மற்றும் குளங்களில் குளிக்கும்போது மீன்களிடம் கடி வாங்கியிருப்பீர்கள். ஆனால், சிப்பிகள் மற்றும் நத்தைகள் கடிக்காது. காரணம் அவைகளுக்கு பற்களில்லை. ஆச்சர்யம் என்னவென்றால் ஒரு காலத்தில் நிறைய பெரிய பற்களுள்ள சிப்பிகளும் இருந்திருக்கின்றன! இவை அரியலூரில் கல்லாய் மாறிய நிலையில் காணக்கிடைக்கின்றன.
இந்த வகை சிப்பி இனதொல்லுயிரியை ரஸ்டால்லம் (Rastellum sp.) என அழைக்கின்றனர். இந்த சிப்பியினங்கள் இப்போதில்லை. இவை முற்றிலும் அழிந்துவிட்டன. சுறாமீன் பற்களைக்கொண்ட இவை கடித்தால் என்ன ஆவது! 2018-ல் முதன்முதலில் ஓர் உடைந்த ரஸ்டால்லத்தைப் பார்த்தபோது சுறாமீனின் பற்கள்தான் இவை என நினைத்தேன் !
மயில் இறகின் அழகில் மயங்காதவர்கள் இருப்பார்களா என்ன? இந்தத் தொல்லுயிர் படிமத்தைப் பாருங்கள். இது வடிவத்தில் ஒரு மயில் இறகை ஒத்துள்ளது.
இதன் எடை ஐந்து கிலோ கிராம் இருக்கும். இப்படி ஒரு உயிர் இன்று உலகில் இல்லை! இவை சுமார் 6.4 கோடி ஆண்டுகளுக்கு முன்னரே முற்றிலும் அழிந்துவிட்டது. இதன் கல்லாய் மாறிய உடலைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்.
சிறுவயதில் கடற்கரைக்குச் சென்றால். கடற்குச்சிகளை சேகரித்து வருவது வழக்கம். குச்சிகளுக்குப் பதிலாக இதை வைத்து சிலேட்டில் எழுதலாம். சிலேட்டில் எழுத கடைகளில் விற்கும் குச்சியை வாங்கி எழுதினால் சிறிய எழுத்தாக எழுத முடியாது. ஆனால், கடற்குச்சியை வைத்து இப்போது உள்ள மைக்ரோ பென்சில் அளவுக்குச் சிறிய எழுத்தாக எழுத முடியும். இந்தக் கடற்குச்சிகள் கடல் முள்ளெலியின் மேல் உள்ள முள்ளாகும். இந்தக் கடற்குச்சிகளை ஒத்த, ஆனால் உருவத்தில் பெரிய தொல்லுயிர் படிமங்கள் அதிக அளவில் காரையில் காணப் படுகின்றன. இதைப் பார்க்க ஒரு பெரிய துப்பாக்கியின் புல்லட் போன்று இருக்கும்.
இதை பெல்மோனைட் (Belemnite) என அழைக்கின்றனர். உண்மையில் இது ஒரு வகை கனவாய் மீனின் தலைப் பகுதியாகும். இந்த வகை கனவாய் மீன்கள் இப்போதில்லை! முற்றிலும் அழிந்துவிட்டது. ஒரு முறை கரையில் தொல்லுயிர் படிமங்கள் சேகரிக்கும்போது பாசி ஊசி விற்கும் மக்களை அங்கு அதிகம் பார்க்க முடிந்தது. அவர்களும் ஏதோ சேகரிப்பதை அறிந்தேன். அவர்களிடம் போய் பேச்சுக் கொடுத்தேன். அவர்கள் இந்த பெல்மோனைட்களை நரியின் பற்கள் என எண்ணுகின்றனர்.
இந்தப்பகுதியில் நிறைய நரிகள் வாழ்கின்றனவாம். கிழட்டு நரியின் பல் கழன்று விழுந்துவிடுமாம். அதுதான் இது என ஒரு பெல்மோனைடை காட்டினார்கள். இதைத் தாயத்தாகக் கழுத்திலோ, இடுப்பிலோ கட்டிக்கொண்டால் காத்து கருப்பு அண்டாது என்றனர்! எனக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. நான் இது சுமார் 15 கோடி வருடங்களுக்கு முன் வாழ்ந்த கல்லாய் மாறிய உயிர் எனக் கூறினேன். அவர்கள் நம்பத் தயாராக இல்லை. பெரிய கோயில்களின் அருகில் விற்பனை செய்வதாகக் கூறினார்கள்.
பின் நான் திருவண்ணாமலை கோயில் அருகில் பாசி ஊசி கடையில் நிறைய பெல்மோனைட்களைப் பார்த்தேன். காத்து கருப்பு … என ஆரம்பித்தனர். நான் ஒன்று என்ன விலை எனக் கேட்டேன். அவர்கள் ஒரு பெல்மோனைட்டை 500 ரூபாய் வரை விற்பது தெரியவந்தது. ஏன் என்று தெரியவில்லை. எனக்கும் பெல்மோனைட்டை நிறைய பிடிக்கும்.
தொல்லுயிர் படிமம் இன்னும் பார்ப்போம்…