மானாமதுரை அருகே மின்வேலியில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சூழி ஒன்றியத்துக்கு உட்பட்ட முகவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் என்ற அயங்காளை (52). இவர், தனது மகன்களான அஜித் (25), சுகந்திர பாண்டி (23) ஆகியோருடன் சிவகங்கை மாவட்ட எல்லை மாரனாடு கிராமம் அருகே முத்துகுமார் என்பவரின் வயல்வெளி பகுதியில் முயல் வேட்டைக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு பன்றிக்கு வைத்த மின் கம்பியை மிதித்ததில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாச்சேத்தி போலீசார், 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், ராணுவ வீரரான அஜித் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறைக்கு சொந்த ஊர் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் முகவூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM