மெட்ரோ ரயில் திட்டப் பணி: பூந்தமல்லி பகுதியில் 15நாள் போக்குவரத்து மாற்றம்…

ஆவடி: மெட்ரோ ரயில் திட்டப் பணிக்காக ஆகஸ்டு1 முதல் 15 வரை 15 நாட்கள்  பூந்தமல்லி பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருப்பதாக ஆவடி காவல்துறை தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக  ஆவடி காவல் ஆணையரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,  சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிக்காக பூந்தமல்லி பை பாஸ் சாலை பகுதியில் ஆக. 1 முதல் 15-ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள், மீஞ்சூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் மட்டும் வழக்கமாக இடதுபுறம் திரும்பும் இடத்தில் திரும்பாமல் மெயின் ரோட்டிலேயே சுமார் 200 மீட்டர் தாண்டி சென்று 2 வெளிவட்ட சாலை பாலங்களுக்கு இடையில் உள்ள சாலை வழியாக இடது புறமாகச் செல்ல வேண்டும்.

அதேபோல் வண்டலூர் பக்கமிருந்து வரும் அனைத்து வாகனங்களும் பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை அருகில் சென்னை வெளிவட்ட சாலை பாலத்திலிருந்து இடதுபுறம் திரும்பாமல் சென்னை வெளிவட்ட சாலையிலேயே நேராக சென்று கோலப்பஞ்சேரி சுங்கச்சாவடிக்கு முன்பு வலதுபுறம் ‘யு டர்ன்’ எடுத்து திரும்பி சென்னை வெளிவட்ட சாலையிலேயே பூந்தமல்லி பைபாஸ் பகுதி வரை வந்து பின்னர் பெங்களூரு – சென்னை நெடுஞ்சாலையை அடைந்து, தாங்கள் சென்று சேர வேண்டிய இடங்களுக்கு சென்றடையலாம். மெட்ரோ ரயில் பணியை விரைந்து முடிக்க இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.