சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் சேர இந்தியாவின் எதிர்ப்பை மீறி ஆப்கானிஸ்தானுக்கு அழைப்பு!

பீஜிங்,

பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே இணைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் 2015 இல் தொடங்கப்பட்ட திட்டமே ‘சீபெக்’ என்றழைக்கப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் ஆகும்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அமைக்கப்படுவதால், இந்தியா சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதனையும் மீறி இந்த திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து சீனா செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சீபெக்கின் 3-வது ஆலோசனை கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அதில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் இணைய விரும்பும் எந்தவொரு சர்வதேச நாட்டையும், பொருளாதார கூட்டணியில் திறந்த மனதுடன் வரவேற்பதாக இருநாட்டு பிரதிநிதிகளும் தெரிவித்தனர்.

இதனிடையே இது குறித்த கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் அரிந்தாம் பக்சி பதில் கூறுகையில்,

“சீனா பாகிஸ்தான் உடன் இணைய, சில நாடுகள் அதில் பங்கேற்பதாக தகவல்கள் வருகின்றன. இதை இந்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இது போன்ற எந்த ஒரு நடவடிக்கை மூலம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பையும் பாதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

இந்த நிலையில், சமீபத்தில் உஸ்பெகிஸ்தான் நாட்டில் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் மந்திரியுடன் சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங்க்-யீ, பொருளாதார வழித்தடத்தை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் ஆப்கானிஸ்தானுக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை மந்திரி மவுலாவி அமீர் கானிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த திட்டம் மூலம் சாலைகள், ரெயில் தடங்கள், குழாய் மூலம் எண்ணெய் வினியோகம் போன்றவை ஏற்படுத்திட சீனா முயன்று வருகிறது. இதன் மூலம் சீனா – மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்தவும் தொடர்பு ஏற்படுத்தவும் முயற்சித்து வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.