குவாஹாட்டி: அன்சாருல் இஸ்லாம் என்ற பெயரில் வங்கதேச தீவிரவாதக் குழு அந்நாட்டில் இயங்கி வருகிறது. இந்தக் குழுவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் இந்தியாவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் அந்தக் குழுவைச் சேர்ந்த 12 பேரை (ஜிஹாதிகள்) கைது செய்ததாக குவாஹாட்டி போலீஸ் எஸ்.பி. அமிதாப் சின்ஹா நேற்று தெரிவித்தார்.
தேசிய அளவிலான ஒத்துழைப்புடன் இந்த தீவிரவாத தேடுதல் வேட்டை நடந்ததாக அசாம் முதல்வர் ஹிமந்தா விஸ்வ சர்மா தெரிவித்தார். கைது செய்யப்பட்ட முப்தி முஸ்தபா என்பவர், மோய்ராபரி போலீஸ் சரகத்துக்குள்பட்ட சோருசோலா கிராமத்தில் மதரஸா பள்ளி நடத்தி வந்துள்ளார். அங்கிருந்தபடி தீவிரவாத செயல்களில் அவர் ஈடுபட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முஸ்தபாவின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.