தமிழக அரசு வழியில் சென்னை மாநகராட்சி: பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க ஒப்புதல் – சிபிஎம் எதிர்ப்பு

சென்னை: தமிழக அரசு போலவே சென்னை மாநகராட்சியும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை மாநகராட்சி மாதாந்திர மாமன்ற கூட்டம் சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னைப் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் கணினி உதவியாளர்கள், கணினி ஆசிரியர்கள், ஆசிரியர்கள், இளநிலை உதவியாளர்கள், பாதுகாவலர்கள், ஆயாக்களை நியமிப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நான்காவது வார்டு உறுப்பினர் ஜெயராமன், “மாநகராட்சிப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர், கணினி ஆசிரியர் உள்ளிட்டோரை தலைமை ஆசிரியர்கள் நேரடியாக நியமிக்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து வெளிநடப்பு செய்து இருக்கிறோம்.

தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை நேரடியாக நியமிப்பதில் சில அரசியல் விளையாட்டு இருக்கக் கூடும். அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்த இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்றால், தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை காலியான இருக்கும் இடத்திற்கு நியமிக்க வேண்டும்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது இதேபோன்று தான் ஆசிரியர்களை நேரடியாக நியமிக்கப்பட்டார்கள். இதெல்லாம் நடக்கக் கூடாது என்றுதான் திமுக கூட்டணிக்கு வாக்களித்து தேர்வு செய்தார்கள். தற்போதும் இதுபோன்று நடைபெறுவது நல்லது அல்ல. அதுமட்டுமில்லாமல் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக ஒரே சம்பளம் பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு தகுதிக்கேற்ப சம்பளம் வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித் துறை ஒப்புதல் அளித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் உயர் நீதிமன்றத்தில் இந்த நியமனங்களை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.