“வறுமையால நடுத்தெருவுல நின்னேன்; அந்த வீடு இப்போ 100 கோடி!" – நடிகை சாந்தி வில்லியம்ஸ் ஷேரிங்ஸ்

சாந்தி வில்லியம்ஸ்… நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருந்தாலும், ‘மெட்டி ஒலி’ சீரியலில் வரும் கொடுமைக்கார மாமியார் என்பதுதான் இவருக்கான பிரதான அடையாளம். சினிமா கலைஞர்களின் நிஜ குணத்துக்கும் அவர்களுக்கு பிரபல்யம் சேர்த்த கதாபாத்திரத்துக்கும் பெரும்பாலும் வேற்றுமைகள் இருக்கும். அதுபோல, வில்லியாகவே சாந்தியைப் பார்த்து மிரண்ட ரசிகர்களுக்கு, அமைதியே அடையாளமான இவரின் நிஜ வாழ்க்கை குறித்தும், சீட்டுக்கட்டுபோல சரிந்த ஆடம்பர வாழ்க்கைக்குப் பிறகு, குடும்ப பாரத்தைத் தனியாளாக மீட்டெடுத்த இவரின் போராட்ட குணமும் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சாந்தி வில்லியம்ஸ்

யதார்த்த சினிமா எடுக்கும் அளவுக்கு, திருப்பங்களுடன் பயணிக்கும் திரைக்கதையைப் போன்றது சாந்தியின் கதை. இதுவரை மீடியாவில் அதிகம் பகிராத தனது பர்சனல் பக்கங்கள் குறித்து மனம் திறந்தார் சாந்தி வில்லியம்ஸ்…

“என் பூர்வீகம் கேரளா. ஆனா, வளர்ந்ததெல்லாம் சென்னையிலதான். என் அக்கா சினிமா பைத்தியம். அவளுக்காகவே சின்ன வயசுல நிறைய சினிமாக்கள் பார்த்தேன். வீட்டுக்குத் தெரியாம நாங்க ரெண்டு பேரும் சினிமா பார்க்கப் போவோம். திரும்பி வரும்போது நெத்தியில விபூதி பூசிக்கிட்டு, கோயிலுக்குப் போயிட்டு வந்ததா வீட்டுல பொய் சொல்வோம். 12 வயசுல எதேச்சையா எனக்கு ஆக்டிங் வாய்ப்பு வந்துச்சு. ஒரு டாகுமென்ட்ரி படத்துல விளையாட்டா நடிச்சேன்.

பிறகு, மலையாளத்துல ஹீரோயினா பல படங்கள்ல நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. அதேநேரம் தமிழ், தெலுங்குலயும் கேரக்டர் ரோல்கள்ல நடிச்சேன்” என்று, முன்கதையும் ஆரம்பித்தவருக்கு, இவரின் கணவரும், மலையாள சினிமாவில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளருமான வில்லியம்ஸுடன் அப்போதுதான் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

சாந்தி வில்லியம்ஸ்

“ஆரம்பத்துல அவருக்கும் எனக்கும் ஆரோக்கியமான பழக்கமும் நட்பும் இல்லை. முதன்முதல்ல நான் அவரைப் பார்த்தப்போ, பரட்டைத்தலை, பழைய டிரஸ்னு ரொம்பவே சுமாரான தோற்றத்துலதான் இருந்தார். பைத்தியக்காரன் மாதிரி இருக்காரேன்னு, அவரை குறைவா எடை போட்டேன்.

மேலும், அவரின் பேச்சு, நடவடிக்கையை ஆரம்பத்துல நான் சரியா புரிஞ்சுக்கலை. அவர் பெரிய கேமராமேன்னு ரொம்ப தாமதமா தெரிஞ்சுகிட்டாலும், அவர்மேல எனக்கு எதிர்மறையான அபிப்ராயம்தான் இருந்துச்சு. அவர் டைரக்ட் செஞ்ச ஒரு படத்துல நடிச்சேன். அந்தப் பழக்கத்துல அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்தார்.

ஒருகட்டத்துல, ‘எங்க வீட்டுக்கு இனி வராதீங்க. உங்களைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கலை’னு கோபமா அவரைத் திட்டிட்டேன். மனைவியைப் பிரிஞ்ச துக்கத்துல அவர் ஏற்கெனவே தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்கார். அந்த விஷயத்துடன் என்மேல அவருக்கு இருந்த பிரியத்தை எங்கப்பாகிட்ட சொல்லி, என்னைப் பெண் கேட்டார். நான் மறுத்துட்டேன்.

சென்னை, வள்ளுவர் கோட்டம் பக்கத்திலேருக்கிற பாம்குரோவ் ஹோட்டல்ல அப்போ அவர் தங்கியிருந்தார். அந்த ஹோட்டல் மொட்டைமாடியில நின்னுகிட்டு, நான் அவரைக் கட்டிக்க சம்மதிக்கலைனா, கீழ குதிச்சுடுவேன்னு மிரட்டினார்.

சாந்தி வில்லியம்ஸ்

போலீஸ் அங்க வந்து பெரிய பிரச்னையாகிடுச்சு. பிறகு, அவரை சமாதானப்படுத்தினாங்க. என்கிட்ட பேசணும்னு மெரினா பீச்சுக்குக் கூப்பிட்டார். விருப்பமே இல்லாட்டியும் வேண்டா வெறுப்பா என் அம்மாவுடன் போனேன். தனியா என்னைக் கூப்பிட்டுப் பேசினார்.

‘என் குருநாதர் வீட்டுல தினமும் 100 குடம் தண்ணீர் பிடிப்பேன். அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் நிறைய பணிவிடைகள் செஞ்சு, ரொம்பவே கஷ்டப்பட்டுதான் சினிமா தொழிலைக் கத்துகிட்டேன்’னு தன் மொத்த கதையையும் சொல்லி அழுதார்.

‘உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு. என்னைக் கட்டிக்கிறியா?’ன்னு சட்டுன்னு கேட்டார். ‘என் கேமரா முன்னாடி எத்தனையோ நடிகைகள் வந்துபோனாங்க. ஆனா, அவங்க யார்கிட்டயும் கேட்க தோணலை. உன்கிட்ட கேட்கத் தோணுச்சு. தப்பா இருந்தா விட்டுரு. உன் முன்னாடி வர மாட்டேன்’னு சென்டிமென்ட்டா உருகினார்.

அதுவரைக்கும் அவர் மேல எனக்கிருந்த பிம்பம் மாறி, கொஞ்சம் கரிசனம் வந்துச்சு. அவரைக் கல்யாணம் செஞ்சுக்க சம்மதிச்சேன். என் வீட்டுலயும் என் முடிவை ஏத்துக்கிட்டாங்க. அப்போ எனக்கு 20 வயசு. அவருக்கு 46 வயசு. அவருக்கு என் அப்பா வயசு. இருந்தாலும் முழு மனதோடுதான் அவரை என் வாழ்க்கைத்துணையா ஏத்துகிட்டேன்” என, கல்யாண நினைவுகளை மெல்லிய புன்னகையுடன் அசைபோட்டவரின் குரலில் தவிப்பைக் கூட்டுகின்றன, கஷ்டகால போராட்டங்கள்.

ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ்

“எனக்குக் கல்யாணமான நேரத்துல, மகேந்திரன் சார் இயக்கின ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்துல நடிச்சுகிட்டிருந்தேன். அந்தப் படத்துக்கு அப்புறமா நடிக்கிறதை நிறுத்திட்டேன். எனக்கு நாலு பிள்ளைகள். அவங்களைக் கவனிச்சுகிட்டு வீட்டோடவேதான் இருந்தேன். அந்தக் காலகட்டத்துல என் கணவர் சினிமாவுல பெரிய கேமராமேன். எந்நேரமும் சிகரெட் பிடிச்சுகிட்டே இருப்பார். அடாவடி குணம். தோற்றமும் ஈர்ப்பா இருக்காது. அதனால, அவரைப் பலரும் கிண்டலா பேசினாலும், உச்ச நட்சத்திரங்கள்கூட அவரின் ஒளிப்பதிவு திறமையை உயர்வா பேசுவாங்க.

நல்லா சம்பாதிச்சார். ஆடம்பரமா வாழ்ந்தோம். அவர் கார் பிரியர். விலை உயர்ந்த கார்கள் வெச்சிருந்தோம். வாராவாரம் கார்களோட நிறத்தை மாத்துவார். ‘வில்லியம்ஸ் கார் போகுது’னு பலரும் பெருமையா சொல்லுற அளவுக்கு புதுப்புது கார்களா வாங்கிக் குவிச்சார். காருக்கு செலவு பண்ணியே அவர் நிறைய சொத்தை இழந்தார்.

1992-ல் அவருக்கு உடம்பு சரியில்லாம போச்சு. அப்பவே எங்க கஷ்டகாலம் ஆரம்பமாகிடுச்சு. சினிமாக்கள் எடுத்தும் கையை சுட்டுக்கிட்டோம். சென்னை, கே.கே.நகர்ல இருந்த எங்க வீட்டை வித்துட்டு, கணவர், குழந்தைகளுடன் நடுரோட்டுல நின்னேன். இன்னைக்கு அந்த வீட்டோட மதிப்பு 100 கோடிக்கும் அதிகமா இருக்கும். வாழ்ந்து கெட்ட குடும்பம்னு சொல்லுவாங்கள்ல. அதுக்கு எங்க வாழ்க்கை ரொம்பவே பொருத்தமானது.

சாந்தி வில்லியம்ஸ்

அந்த இக்கட்டான நேரத்துல, எனக்குத் தெரிஞ்ச அம்மா ஒருத்தங்க, வீடு பிடிச்சுக் கொடுத்தாங்க. நாம எவ்ளோ பெரிய ஆளா வசதியா வாழ்ந்திருந்தாலும், கஷ்ட நிலைக்குத் தள்ளப்பட்டோம்னா ஒருத்தர்கூட நம்மை சீண்டவே மாட்டாங்க. அதை அனுபவத்துல உணர்ந்தேன்.

என் புருஷன் நல்லா இருந்தப்போ, மம்மூட்டி, மோகன்லால்னு எங்க வீட்டுக்கு வராத பிரபலங்களே இல்லை. ஆனா, அவரின் நிலைமை மோசமானதும் ஒருத்தரும் அவரைப் பார்க்க வரலை. ரஜினி சாரும் என் கணவரும் ஆரம்ப காலத்துல ஒரே ரூம்ல தங்கி சினிமா வாய்ப்புக்கு முயற்சி பண்ணியிருக்காங்க. அந்த நட்புல, அவர் மட்டும்தான் எங்க கஷ்டத்துக்கு உதவினார்.

என் கணவரோட சிகிச்சைக்கான சிரமங்கள் ஒருபக்கம். எங்களோட நாலு குழந்தைகளை வளர்த்தாக வேண்டிய பொறுப்பு இன்னொரு பக்கம். சினிமாவைத் தவிர எனக்கு வேற எந்த வேலையும் தெரியாது. அதனால, மறுபடியும் நடிக்க முடிவெடுத்தேன். உடல் எடையைக் குறைச்சுட்டு, தெரிஞ்ச வட்டாரத்துல வாய்ப்பு கேட்டேன்” கண்ணீருடன் சொல்லும் சாந்திக்கு, விஜய் நடித்த ‘உதயா’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கிடைத்திருக்கிறது.

‘ஜோடி’, ‘பார்த்திபன் கனவு’, ‘அந்நியன்’ போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவருக்கு, ‘மெட்டி ஒலி’ சீரியல் திருப்புமுனையாக அமைந்தது.

சாந்தி வில்லியம்ஸ்

“என் கணவரோட சிகிச்சைக்கு லட்ச லட்சமா செலவு செஞ்சோம். ஆனாலும், அவரைக் காப்பாத்த முடியலை. அப்பல்லாம் என் பட்டுப்புடவைகளையெல்லாம் ஒவ்வொண்ணா வித்து நிலைமையை சமாளிச்சதை இப்போ நினைச்சாலும் மனசு கலங்கும். கிட்டத்தட்ட 20 வருஷங்களுக்குப் பிறகு, மறுபடியும் சினிமாவுல நடிக்க ஆரம்பிச்ச என் ஓட்டம், இன்னும் முடிவுக்கு வரலை. முன்பு என் பிள்ளைகளுக்காக உழைச்சேன். இப்போ பேரப் பசங்களுக்காகச் சம்பாதிக்கிறேன். இப்போ ஓரளவுக்கு நல்லா இருக்கோம்.

போராட்டமான பயணத்துல, சிவாஜி சார், ரஜினி சார், கே.பாலசந்தர் சார்னு பல ஆளுமைகளோட அன்பையும் பாசத்தையும் பெற்றதுல எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. கமல் சார் என் ஆரம்பகால நண்பர். ‘பாபநாசம்’ படத்துல அவருக்கு மாமியாரா நடிச்சேன். என்ன நினைச்சாரோ தெரியலை. ஒருநாள் படக்குழுவினர் பலரையும் உட்காரவெச்சு, என் வாழ்க்கை கதையை மணிக்கணக்குல பெருமையா அவர் சொல்லியிருக்கார்.

சாந்தி வில்லியம்ஸ்

இந்த அளவுக்குப் பெரிய ஆளுங்களோட அன்புக்குப் பாத்திரமா இருக்கிறதே பெருமைதான். என் அனுபவத்துல நான் சொல்லிக்கிறது ஒண்ணுதான். நம்ம எதிர்பார்ப்புபடியே வாழ்க்கை அமைஞ்சா நல்லதுதான்.

ஒருவேளை அப்படி அமையலைனா, என்ன ஆனாலும் கடைசி வரைக்கும் நம்பிக்கையை இழக்காம ஓடிக்கிட்டே இருக்கணும்!” தன் எனர்ஜிக்கான காரணத்துடன் முடிக்கிறார் சாந்தி வில்லியம்ஸ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.