திம்பு: டோக்லாம் பள்ளத்தாக்கின் கிழக்கே பூடான் எல்லையில் சீனா ஒரு கிராமத்தை கட்டமைத்து வருவது தொடர்பான புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் அண்மையில் வெளியாகின. இந்தப் பகுதி இந்தியாவுக்கு பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்நிலையில் இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே பூடானில் தனது 2 நாள் பயணத்தை நேற்று தொடங்கினார். தலைநகர் திம்புவில் பூடானின் 3-வது மன்னர் ஜிக்மே டோர்ஜி வாங்சுக் நினைவாக தேசிய நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் அஞ்சலி செலுத்துகிறார்.
மனோஜ் பாண்டே தனது பயணத்தில் பூடான் மன்னர் ஜிக்மேகேசர் நம்கெல் வாங்சுக், பூடானின்4-வது மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக் ஆகியோரை சந்திக்க உள்ளார். மேலும் பூடான் ராணுவத் தளபதியையும் அவர் சந்திக்கிறார். இந்த சந்திப்புகளில் டோக்லாம் பள்ளத்தாக்கில் சீனாவின் நடவடிக்கைகள் முக்கியப் பங்கு வகிக்கும் எனத் தெரிகிறது.
இரு நாட்டு படைகளுக்கு இடையே வலுவான கலாச்சார மற்றும் தொழில்முறை பிணைப்புகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாகவும் பூடான் ராணுவத் தளபதியுடன் மனோஜ் பாண்டே விவாதிப்பார் என கூறப்படுகிறது.
இதனிடையே இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்துக்கு யுவான் வாங்-5 என்ற அறிவியல் ஆய்வுக் கப்பலை ஒருவாரத்துக்கு அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. இதுகுறித்தும் மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.