பா.ஜ.க கூட்டணி: ஆழம் பார்த்தாரா ஸ்டாலின்..?
சென்னையில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியையொட்டி நடந்த சில நிகழ்வுகள், விழா மேடையில் பிரதமர் மோடியும் முதல்வர் ஸ்டாலினும் ஒருவருக்கு ஒருவர் சிரித்துப்பேசி வெளிப்படுத்திய இணக்கமும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் பாராட்டும், கடந்த 2 நாட்களாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின்போதும், தேர்தலுக்கு முன்னதாகவும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியை தி.மு.க எந்த அளவுக்கு விமர்சித்ததோ, அதற்குத் துளியும் குறைவில்லாமல் பா.ஜ.க-வையும் மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி தலைமையிலான ஆட்சியையும் வறுத்தெடுத்தது.
இன்னும் சொல்லப்போனால், எடப்பாடி ஆட்சியில் மோடி தமிழகம் வந்தபோது தி.மு.க-வினர் நடத்திய கறுப்புக்கொடி போராட்டமும், கருப்பு பலூன்களைப் பறக்கவிட்டு காட்டிய அதிரடிகளும் பா.ஜ.க-வினரை மிரள வைத்தது. ஆனால், தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பின்னர், தி.மு.க-வின் பாஜக எதிர்ப்பில் காட்டம் குறையத் தொடங்கியதாக பேச்சு எழுந்தது.
குறிப்பாக, போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின்போது இடதுசாரிகள், பெரியாரிய இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மீது காட்டும் கடுமையும் கெடுபிடிகளும்
பா.ஜ.க ஆதரவு இயக்கங்களான ஆர்.எஸ். எஸ், விஸ்வ இந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகளிடம் காவல்துறை காட்டுவதில்லை என்று அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். மேலும், தாசில்தார், ஆட்சியர் போன்ற நிர்வாக அதிகாரிகள் மட்டத்திலும் பா.ஜ.க ஆதரவு அமைப்புகளிடம் வளைந்துகொடுத்துப் போகும் போக்கு காணப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். இதற்கு உதாரணமாக, இந்து அமைப்புகளின் எதிர்ப்பைக்காட்டி ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்பட்டது, ஆர்.எஸ். எஸ், விஸ்வ இந்து பரிஷத் அமைப்புகளைச் சேர்ந்த முக்கியமான தலைவர்கள் தமிழகம் வந்தால், பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளில் அதிகாரிகள் அனுப்பும் சர்ச்சையான சுற்றறிக்கைகள் போன்றவற்றைப் பட்டியலிட்டனர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக தருமபுரம் ஆதீனம் பல்லக்கு விவகாரத்தில், அரசு பின்வாங்கியதையும் அவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியில், டெல்லி தி.மு.க அலுவலகம் திறப்பு விழாவில் பா.ஜ.க தலைவர்கள் அழைக்கப்பட்டதில் தொடங்கி, தி.மு.க எம்.பி-க்கள் டெல்லி ஆளும் தரப்பு புள்ளிகளிடம் காட்டும் நெருக்கம் வரை பல நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி, பா.ஜ.க-வுடன் தி.மு.க நெருக்கம் காட்டுவதாக பேச்சு எழுந்தது.
இவற்றையெல்லாம் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், தமிழர் வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகளும் கவனித்துதான் வந்தன.
அதே சமயம், மகாராஷ்டிராவில் இரண்டரை ஆண்டுக்கால உத்தவ் தாக்கரே அரசை பாஜக கவிழ்த்ததைப் பார்த்த தி.மு.க, சற்று மிரண்டுதான் போனது. போதாதற்கு இந்த மாத தொடக்கத்தில் தெலுங்கானா ஹைதராபாத்தில் நடந்த பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு கூட்டத்தில், ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தங்கள் கட்சியை ஆட்சியில் அமர்த்தும் ‘ஆபரேஷன் சவுத் இந்தியா’ என்ற அறிவிப்பை அமித்ஷா அறிவித்தது ஸ்டாலின் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ஆட்சியில் உள்ள முதல்வர்களுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியதை மறுக்க முடியாது. போதாதற்கு, ” தி.மு.க-விலும் எங்களுக்கு ஷிண்டேக்கள் உள்ளனர்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேறு திரி கொளுத்தியது அறிவாலய வட்டாரத்தைச் சற்று பதறிப்போகத்தான் வைத்தது. அதனால்தான், உதயநிதியை அமைச்சராக்கும் முடிவைக் கூட ஸ்டாலின் தள்ளி வைத்தார் எனச் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில்தான், ” ‘ டெல்லியை அதிகம் பகைத்துக்கொள்ள வேண்டாம்… கட்சியைச் சலசலப்பு இல்லாமல் கொண்டு செல்ல வேண்டுமானால் ஆட்சி அதிகாரம் முக்கியம். அதனால், குறைந்தபட்சம் 2024 நாடாளுமன்ற தேர்தல் வரைக்குமாவது பா.ஜ.க-வுடன் பகைமை பாராட்டாமல் இணக்கமாக போகலாம்..!’ என தி.மு.க-வுக்கான டெல்லி விஷயங்களை ‘டீல்’ செய்கிற கட்சியின் மூத்த புள்ளி, கட்சியின் சீனியர் தலைவரை உடன் வைத்துக் கொண்டு சொன்ன ஆலோசனையும், அதற்கு அந்த சீனியர் தலைவரும், ‘ அவர் சொல்வதும் சரிதான்’ என்ற ரீதியில் தலையாட்டியதும், ஸ்டாலினையும் சற்று யோசிக்க வைத்தது. இதனையடுத்தே பா.ஜ.க விஷயத்தில் ஸ்டாலினின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது. அதன் வெளிப்பாடுதான் சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடக்க விழாவில் மோடியுடன் ஸ்டாலின் காட்டிய இணக்கம்” என்று சொல்லும் அறிவாலய வட்டாரத்துக்கு நெருக்கமானவர்கள், இது ஒருவகையான ஆழம் பார்க்கும் உத்திதான் என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், விழா போஸ்டரில் மோடி படத்தை இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற பா.ஜ.க-வினரின் கோரிக்கையை ஏற்று அதைச் செயல்படுத்தியது, அரசு விளம்பரத்தில் மோடி படத்தை ஒட்டிய பா.ஜ.க-வினர் மீது காவல்துறை நடவடிக்கை ஏதும் எடுக்காதது, அதே சமயம் அந்த படத்தின் மீது கருப்பு மை பூசிய பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டது போன்றவையெல்லாம் தி.மு.க கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தின.
குறிப்பாக இதுவரை இல்லாத வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இந்த நிகழ்வையெல்லாம் சுட்டிக்காட்டி, “பா.ஜ.க-வினரின் மனம் குளிரும் வகையில் காவல்துறை நடந்துகொள்கிறது” எனக் காட்டமாக அறிக்கை விட்டது ஸ்டாலின் மீதான நேரடியான விமர்சனமாகவே பார்க்கப்பட்டது. மேலும் சமூக வலைதளங்களிலும், தி.மு.க ஆதரவாளர்களே இது தொடர்பாக கடுமையான விமர்சனங்களைப் பதிவிட்டனர். ஒருவேளை எதிர்காலத்தில் பாஜகவுடன் தி.மு.க கூட்டணி அமைத்தால், ஒருகாலும் தி.மு.க-வுக்கு வாக்களிக்க மாட்டோம் என்றும் வெளிப்படையாகவே குறிப்பிட்டனர். இந்தக் கருத்துகளெல்லாம் தி.மு.க ஐடி விங் மற்றும் உளவுத்துறை மூலம் ஸ்டாலின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.
மேலும் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக தலித்துகளை காவல்துறை குறி வைத்து கைது செய்வதாக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விசிக குற்றம் சாட்டுவது, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தி.மு.க தலைமை மீது அதிருப்தி தெரிவித்து அண்மையில் அளித்த பேட்டி, இடதுசாரி கட்சிகளின் விமர்சனங்கள் போன்றவையும் ஸ்டாலினை யோசிக்க வைத்ததாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்தே, “தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான கூட்டணி தொடரும்” என்று விளக்கம் அளித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பான விளக்கத்தை முழுமையாக படிக்க க்ளிக் செய்க…
ஆளுநர் மாளிகையில் நடந்த சந்திப்பு: மோடி சொன்ன தேர்தல் அசைன்மென்ட்!
செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ஆளுநர் மாளிகை சென்ற பிரதமர் மோடியுடன், தமிழக பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர்கள் ஆலோசனை மேற்கொண்டது கவனம் பெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, எல்.முருகன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சந்தித்தனர். இவர்களோடு அமர்பிரசாத் ரெட்டி, ஏ.பி.முருகானந்தம், இயக்குநர் பேரரசு, நடிகர் ஆர்.கே.சுரேஷ், இசையமைப்பாளர் தீனா, குஷ்பூ, மாநில-மாவட்ட நிர்வாகிகள் மோடியை சந்தித்துள்ளனர்.
Chess Olympiad: இந்தியாவுக்காக முதன் முதலாகப் பதக்கம் வென்ற ரஃபிக் கானின் கதை!
செஸ் என்பது தனியொருவர் விளையாடும் விளையாட்டு. ஆனால், ஒலிம்பியாட் போன்ற சில தொடர்களில் வீரர்கள் அணியாகப் பங்கேற்கும் நடைமுறை உண்டு. ஒலிம்பியாட் போட்டிகள் சிறப்பாகச் செயல்படும் நாட்டை அங்கீகரிக்க நடத்தப்படும் ஒரு தொடர். கிரிக்கெட், கால்பந்து உலகக்கோப்பைகளில் தொடர் நாயகன் விருது வழங்கப்படுவதைப்போல ஒலிம்பியாடில் சிறப்பாகச் செயல்படும் வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களால் அங்கீகரிக்கப்படுவது வழக்கம். இந்தியாவிலிருந்து ஒலிம்பியாடில் முதன்முதலாகத் தனிப்பட்ட முறையில் பதக்கம் வென்றவர் கார்பென்டர் ரஃபிக் கான்.
” காங்கிரஸ், திமுக-வினர் புள்ளைய ஒழுங்கா வளர்க்குறாங்க… பதவிக்கு வராங்க” – சொல்கிறார் துரைமுருகன்
அறுபது ஆண்டு அரசியல் அனுபவத்துடன், 10-வது முறையாக எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார் தி.மு.க பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன். அவரிடம் இன்றைய அரசியல் நிலவரங்கள் குறித்தும், தி.மு.க-வின் உட்கட்சி விவகாரங்கள் குறித்துப் பேசியபோது பெரியார், காமராஜர் அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் என தான் பயணித்த அரசியல் தலைவர்கள் உடனான பயணம், இத்தனை ஆண்டுக்கால அரசியல் அனுபவம் என விரிவாக பேசினார்.
குலு குலு: சினிமா விமர்சனம்
யார் உதவி எனக் கேட்டாலும் ஓடோடிச் சென்று செய்யும் ஒருவன், ஒரு கடத்தல் டிராமாவில் சம்பந்தப்பட, அது தொடர்பாக அவன் சந்திக்கும் மனிதர்களும், அவர்களால் விளையும் களேபரங்களுமே இந்த `குலு குலு’.
கலகலப்பு பாதி, சீரியஸ் மீதி எனப் பங்கு பிரித்து விவரிக்கிறது இந்த ‘குலு குலு’.
‘குலு குலு’ விமர்சனத்தை முழுமையாக படிக்க க்ளிக் செய்க…
“சொந்த வீடும், காரும் இல்லாத ஒரே ‘பாப்புலர்’ கதாநாயகி நான்தான்..!” – ஸ்ரீவித்யா#AppExclusive
‘அபூர்வ ராகங்கள்’ படத்திற்குப் பிறகு, தமிழ்ப்படவுலகில் ஶ்ரீவித்யாவிற்கு அதிர்ஷ்டம் பிறந்தது. சுமார் எட்டு வருடங்களாக படவுலகின் கதவுகளைத் தட்டித் தட்டி அலுத்துப் போயிருந்தவருக்கு, அப்படத்தில் நடித்ததனால் பெயரும், புகழும், படங்களும் கிடைத்தன. இருந்தும், அப்படத்திற்குப் பிறகு அவர் நடித்த படங்கள் எதுவும் வெற்றிகரமாக ஓடவில்லை. ஓரளவிற்கு அவர் அதற்குக் காரணமில்லை என்றாலும் கூட, படவுலகில் ஶ்ரீவித்யாவை ‘அதிர்ஷ்டம் இல்லாத நடிகை’ என்று கூற ஆரம்பித்து விட்டார்கள். இது பற்றி என்ன சொல்கிறார் ஶ்ரீவித்யா? “முதல் தடவையாக இந்த வார்த்தையைக் கேட்கிறேன்.
இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு! விகடனில் வெளியான ஸ்ரீவித்யாவின் முழு பேட்டியையும் படிக்க க்ளிக் செய்க…