சில வருடங்களுக்கு முன்பு வரை பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் வெளியாகும்போது ஒருசில மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைப் பார்த்து வந்தோம். ஆனால், சமீப காலமாக மாணவர்களின் தற்கொலைகளை அடிக்கடி கடந்து கொண்டிருக்கிறோம். மிக சமீபத்திலும் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழ்நாட்டையே உலுக்கியெடுத்து விட்டன. அதிகப்படியான படிப்புப் பளுவில் ஆரம்பித்து கல்விக்கூடங்களில் நடக்கிற பாலியல் தொல்லை வரை இதற்குப் பல காரணங்களை விரல் நீட்ட முடியும்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், ‘மாணவர்கள் காலையில் இருந்து இரவு வரை படிக்கிறார்கள். மற்றவர்களுடன் பேசிப் பழகவும், எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்ட்டிவிட்டீஸில் ஈடுபடவும் மாணவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. அவர்களின் கற்றல் நேரத்தை அரசு முறைப்படுத்த வேண்டும். கல்விக்கூடங்களில் நல்ல சூழலை உருவாக்க, பள்ளிக் குழந்தைகளுக்காக மாவட்டம் தோறும் உளவியல் ஆலோசகர்களை நியமிக்க தமிழக அரசு கொள்கை வகுக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தி இருக்கிறது.
பள்ளிக்கூடங்களில் நல்ல சூழல் உருவாகவும், மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்கவும் உளவியல் ஆலோசகர்களின் பங்களிப்பு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள, உளவியல் ஆலோசகர் சரஸ் பாஸ்கரிடம் பேசினோம்.
”பள்ளிக்கூடங்களில் உளவியல் ஆலோசகர்களும் இருக்க வேண்டுமென்பதை சி.பி.எஸ்.இ பள்ளிக்கூடங்கள் ஏற்கெனவே பின்பற்றி வருகின்றன. தற்போது, சென்னை உயர் நீதிமன்றமும் தமிழக அரசும் இதைப் புரிந்து கொண்டிருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு பெரும் நிம்மதியைத் தந்திருக்கிறது. மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்ளும் மோசமான காலகட்டத்தில் இருக்கிறோம். இந்த நேரத்தில், உளவியல் ஆலோசகர்களின் ஆலோசனையும் வழிகாட்டுதலும் மாணவர்களுக்கு கண்டிப்பாக தேவை. இதை அரசுக்கு அறிவுறுத்தியிருக்கும் நீதிமன்றத்துக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
கவுன்சலிங் என்பது அறிவுரை சொல்வது மட்டுமல்ல… சம்பந்தப்பட்ட மாணவர்களின் பிரச்னைக்கு காரணம் அவர்களுடைய குடும்பமா, உடன்படிக்கும் பிள்ளைகளா, ஆசிரியர்களா அல்லது பாலியல் தொல்லை போன்ற வேறு ஏதாவது மோசமான சம்பவங்களா என்பதைப் பக்குவமாகத் தெரிந்து கொள்வதற்குத் தேவையான கல்வித்தகுதியுடன், அதற்கான பயிற்சியையும் பெற்றவர்கள் உளவியல் ஆலோசகர்கள்.
மது, குடும்ப வன்முறை, அதிகப்படியான படிப்புச்சுமை என்று காலத்துக்கு ஏற்றாற்போன்று மாணவர்களின் பிரச்னைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. இதேபோல், அந்தந்த வயதுக்கே வரக்கூடிய பிரச்னைகளும் இருக்கின்றன. இவற்றையெல்லாம் அறிந்து, இதற்கேற்றாற்போன்ற ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும், தீர்வுகளையும் வழங்க முடிந்தவர்களால் மட்டுமே மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்க முடியும். இந்த இடத்தில்தான் உளவியல் ஆலோசகர்களின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. அரசும் பள்ளிக்கூடங்களும் விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது” என்ற சரஸ் பாஸ்கர், உளவியல் ஆலோசனைகளை யார் வழங்க வேண்டும் என்பது தொடர்பான தன்னுடைய கருத்தையும் வலியுறுத்துகிறார்.
”மாணவர்கள்தான் சமுதாயத்தின் வருங்காலத் தூண்கள். அந்தத் தூண்கள் தவறான முடிவெடுத்து தற்கொலையை நாடாமல் இருக்க வேண்டுமென்றால், உளவியல் படித்து, அதன் யுக்திகள் அறிந்து, அதற்கான பயிற்சிகளைப் பெற்ற நிபுணர்களை அரசு இப்பணியில் அமர்த்த வேண்டும். பொது மருத்துவம் படித்தவர்கள் தொலைபேசி வழியாக கவுன்சலிங் கொடுத்தால், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அந்த நேரத்துக்கு ஆறுதல் கிடைக்கலாம் அல்லது எல்லாம் சரியாகிடும் என்ற வெற்று நம்பிக்கை கிடைக்கலாம். இதனால், சம்பந்தப்பட்ட மாணவர்களின் தற்கொலை முடிவு தள்ளிப்போகலாமே ஒழிய, அதை நிரந்தரமாக அவர்களுடைய மனதிலிருந்து நீக்க முடியுமா என்பது சந்தேகமே.
ஏனென்றால், பொது மருத்துவம் படித்தவர்கள் உளவியல் தொடர்பான கல்வியையும் பயிற்சியையும் முழு நேரமாகக் கற்றவர்கள் அல்லவே..! தவிர, சமூக சேவகர்களும் பொது சேவை செய்கிறவர்களும்கூட மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குதல் என்பது, ஓர் உளவியல் ஆலோசகருடன் ஒப்பிடுகையில் அவ்வளவு செறிவாக இருக்க முடியாது.
இந்நேரத்தில் உளவியல் ஆலோசகர்களுக்கும் ஒரு வார்த்தை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நீங்கள் வேலை செய்கிற பள்ளிக்கூடங்களைவிட, மாணவர்களின் நியாயங்களுக்கும், பிரச்னைகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்” என்று முடித்தார் உளவியல் ஆலோசகர் சரஸ் பாஸ்கர்.