பார்த்தா சாட்டர்ஜியும் அர்பிதா முகர்ஜியும் சேர்ந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள பண்ணை வீடு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர்கள் நியமன முறைகேடு தொடர்பாக திரிணாமுல் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவரின் உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோரை அமலாக்கத்துறை கைது செய்து விசாரித்து வருகிறது. பார்த்தா சட்டர்ஜிக்கு நெருங்கிய கூட்டாளியும் நடிகையுமான அர்பிதா முகர்ஜி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 50 கோடி ரூபாய் ரொக்கத்தை கைப்பற்றினர்.
அர்பிதா முகர்ஜியின் பெயரில் இருக்கும் 3 வங்கிக் கணக்குகளை முடக்கும் நடவடிக்கைகளை அமலாக்கத்துறையினர் தொடங்கியுள்ளனர். இந்த வங்கிக் கணக்குகளில் ரூ.2 கோடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அர்பிதா முகர்ஜி நடத்திவரும் நிறுவனங்களுக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளையும் அமலாக்கத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த 23 -ம் தேதி கைதான பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜி ஆகியோரை ஆகஸ்ட் 3ம் தேதி வரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே மேற்கு வங்க அமைச்சரவையில் இருந்து பார்த்தா சாட்டர்ஜி நீக்கப்பட்டார்.
இந்நிலையில் பார்த்தா சாட்டர்ஜியும் அர்பிதா முகர்ஜியும் சேர்ந்து சாந்திநிகேதனில் பண்ணை வீடு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ‘இந்தியா டுடே’ வெளியிட்டுள்ள செய்தியின்படி, பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜி இருவரும் வாங்கிய அந்த பண்ணை வீடு, ரூ.20 லட்சம் மதிப்புள்ளது ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்: மூதாட்டியை கொன்ற ‘பிட்புல்’ நாய் மீண்டும் உரிமையாளரிடமே ஒப்படைப்புSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM