ஆண், பெண் என்ற படைப்பு பல சிறப்புகளைக் கொண்டது, பல்வேறு காலநிலைகளைக் கடந்து மனித இனம் வலிமையாக வாழ, படைப்பில் உள்ள அறிவியல் உண்மைகள் நம்மை வியக்க வைக்கின்றன. இயற்கையில் வலிமை படைத்தவர்கள் ஆண்களா, பெண்களா… அறிவியல் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.
ஆண், பெண் பாலின வேறுபாடு குரோமோசோம்களுடன் தொடர்புடையது. மனித உடல் பல செல்களால் ஆனது. அந்த ஒவ்வொரு செல்லின் மையத்திலும் கரு உள்ளது, அதனுள் அமைந்துள்ளன மரபணு தகவல்களை வரையறுக்கும் குரோமோசோம்கள். இவைதான் மனிதர்களின் கண் நிறம், ரத்த வகை, ஆண், பெண் பாலின பாலினம் என ஒரு நபரின் பல்வேறு பண்புகளைத் தீர்மானிக்கின்றன.
குரோமோசோம்கள் இரண்டு நீண்ட இழையிலான DNA துண்டுகள் மற்றும் புரதத்தினால் ஆனவை. இந்த DNAவில்தான் நம் மரபணுக்கள் உள்ளன. இந்த மரபணுக்களில்தான் உயிரினங்களின் உடலின் வடிவம், சராசரி எடை மற்றும் குணாதிசயங்கள் அடங்கியுள்ளன. இந்தப் படத்தில் பெரிதாக உள்ளதுதான் பெண்மைக்கான மரபணுத் தொகுப்பு. இதை X குரோமோசோம் என அழைப்பார்கள்.
சிறியதாக உள்ளதுதான் ஆண்மைக்கான மரபணு. அது Y குரோமோசோம் என அழைக்கப்படுகிறது.
இந்த இரண்டும்தான் பாலுணர்வு என்ற ஆண் பெண் ஈர்ப்பின் அடிப்படை. இந்த ஈர்ப்புதான் பூமியில் எண்ணிலடங்கா உயிரினங்கள் தழைத்தோங்க காரணம். இதனால்தான் இவ்வுலகம் இயக்குகிறது. அறிவியலின் அடிப்படையில் ஆண் பெண் என்ற இருபாலர்களில் யார் வலிமையானவர்கள் என பார்ப்போம்.
1. X குரோமோசோம் பெரியது ஆனால் Y குரோமோசோம் மிகவும் சிறியது எனப் பார்த்தோம். பெண்மையின் பெட்டகமான X குரோமோசோம் சுமார் 15.5 கோடி மரபணுக் காரணிகளைக் கொண்டது. ஆனால், உடலில் உள்ள 24 வகையான குரோமோசோம்களில் மிகச்சிறியது Y குரோமோசோம்தான் ! Y குரோமோசோம்தான் ஓர் ஆண் உருவாக காரணமானது. இதனில் 5.8 கோடி மரபணு காரணிகள்தான் உள்ளன. அதாவது X குரோமோசோம், Y குரோமோசோமைவிட சுமார் மூன்று மடங்கு பெரியது!
2. படிப்படியாக Y குரோமோசோம் சுருங்கி வருகிறது. ஒரு காலத்தில் இது இல்லாமல் போய்விடும். X குரோமோசோம் அப்படி அல்ல, நிலையானது. அவ்வளவு பலவீனமான நிலையிலா ஆண்கள் உள்ளனர் என்ற எண்ணத்தை உண்டுபண்ணும் வகையில் உள்ளது!
3. உடலில் உள்ள செல்களில் இரண்டு X குரோமோசோம்கள் இருந்தால் அது பெண். ஒரு X மற்றும் ஒரு Y குரோமோசோம் இருந்தால் அது ஆண். அதாவது கவனிக்க வேண்டிய சங்கதி என்னவென்றால் ஒரு X குரோமோசோமாவது நம் அணுக்களிலிருந்தாக வேண்டும். இல்லை என்றால் அந்த மனிதன் மட்டுமல்ல அவன் உடலில் ஒரு செல்கூட உயிர் வாழ முடியாது. X குரோமோசோமில் அவ்வளவு சக்தி உள்ளது. அதாவது X குரோமோசோம்தான் உயிரியின் அடிப்படை.
4. நவீன தொழில்நுட்ப உதவியுடன் பெண்களால் ஆண் துணை இல்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். அதாவது, விந்தணுகூட தேவையில்லை.
5. கருமுட்டை சுமார் 100 மைக்ரான் விட்டம் கொண்டது. அளவில் பெரியது. விந்தணு சுமார் 5 மைக்ரான் விட்டமுள்ள தலையையும் 50 மைக்ரான் நீளமுள்ள மெல்லிய வாலையும் கொண்டுள்ளது. இது அளவில் சிறியது.
6. விந்துதான் கருமுட்டையை நாடிச் செல்ல வேண்டும். ஒரு காலமும் கருமுட்டை விந்தைத் தேடிவராது. அதன் சக்தி அப்படி!
7. அது மட்டுமல்ல ஒரு கருமுட்டையுடன் இணைய சுமார் 600 கோடி விந்தணுக்கள் போட்டிபோடும். இந்தப் போட்டியில் கிடைத்த வெற்றிக்கனிதான் பிறக்கும் ஒவ்வொருவரும்.
8. மரபணு சேதங்கள் ஆண்களில் மலட்டுத்தன்மையை உண்டு பண்ண வல்லவை. ஆனால், அதே மரபணு சேதங்கள் உள்ள பெண்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டு!
9. சராசரியாக ஆண்களைவிட பெண்கள் அதிக நாள்கள் உயிர் வாழ்கின்றனர்.
10. மன அழுத்தம் மற்றும் கடுங்குளிர் போன்ற உபாதைகளைத் தாங்குவதில் பெண்கள் ஆண்களைவிட வல்லவர்கள்.
11. ஆண்களைவிட பெண்களே வலியைத் தாங்குவதில் வல்லவர்கள். காரணம், அவர்களின் உடலமைப்பு அப்படி. பிரசவ வலியைத் தாங்கும் வகையில் அவர்கள் உடலமைப்புள்ளது.
உடலில் உள்ள குரோமோசோம்களால்தான் நம்மிடையே மரபணுவில் ஆங்காங்கே பல வித்தியாசங்கள் இருக்கின்றன. இதுவே நாம் உருவத்தில், முக அமைப்பில், சருமத்தின் நிறத்தில் , நோய் எதிர்ப்புசக்தியில் என எண்ணற்ற வகையில் வேறுபாடுகள் உள்ளன.
வகைவகையான மரபணுக்களைக் கொண்ட மக்களிருந்தால் தான் பூமியில் மனிதயினம் வலுவானதாக வெற்றி நடை போடமுடியும். பல வகையான நோய்கள் மற்றும் இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டு நிலைத்திருக்க முடியும். இல்லை என்றால் இந்த இனம் எளிதில் அழிந்துவிடும்! ஆக, வலுவான சமுதாயத்தை உருவாக்க ஆண் – பெண் என்ற இரு பாலினங்கள் அவசியமாகின்றன.