பிரபல மலையாள நடிகரான சரத் சந்திரன் மர்மமான நிலையில் இறந்துகிடந்த நிலையில், அவரது அறையில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் கொச்சி வைட்டிலாவைச் சேர்ந்தவர் 37 வயதான சரத் சந்திரன். முதுகலையில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் முடித்த இவர், முதலில் ஐடி துறையில் பணியாற்றியுள்ளார். அதன்பிறகு, டப்பிங் கலைஞராக சினிமாத் துறையில் அடியெடுத்து வைத்த சரத் சந்திரன், ‘Aneesya’ என்றப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து ‘koode’, ‘Comrade in America’, ‘Oru Mexican Aparatha’ உள்ளிட்ட படங்களிலும், சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக ‘அங்கமாலி டைரீஸ்’ படத்தில் கல்லூரியில் பெண்ணுக்கு தொல்லை தருபவராக நடித்து பிரபலமானார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்னர், தந்தை சந்திரன், தாய் லீலா, இளைய சகோதரர் ஷியாம் சந்திரன் ஆகியோருடன் காக்காட் பகுதிக்கு குடிபெயர்ந்தநிலையில், நேற்று வீட்டில் அவரது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி நடத்தப்பட்ட விசாரணையில், சரத் சந்திரன் அறையில் இருந்து ஒரு தற்கொலை கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அதில் தனது இறப்புக்கு யாரும் காரணமில்லை என்று சரத் சந்திரன் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்தக் கடிதத்தின் வாயிலாக கடந்த சில மாதங்களாகவே அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்தது தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இதனால் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
எனினும் சரத் சந்திரனின் உடற்கூராய்வு பரிசோதனைக்குப் பிறகே முழு விவரங்கள் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சரத் சந்திரனின் இறப்புக்கு மலையாள திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.