நிலமெங்கும் போரும் ரத்தமும் பீரங்கி சத்தமும் நிறைந்த பாலஸ்தீன தேசத்தில் இருந்து ஒலிம்பியாட் போட்டியில் மிக குறைந்த வயதை சேர்ந்த 8 வயது சிறுமியான ராண்டா செடர் பங்கேற்றுள்ளார். குறும்பு தனமும், அறிவு திறனும் பெற்ற சதுரங்க சிறுமி குறித்து இத்தொகுப்பில் காணலாம்.
5 வயதிலேயே அறிமுகமான சதுரங்கம்!
தேசம் கடந்து, மொழி கடந்து, எல்லைகள் கடந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த சதுரங்க வீரர்கள் செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வந்து உள்ளனர். அதில் அனைவரையும் கவனத்தையும் பெற்ற இளம் வீராங்கனையாக உள்ளார் ராண்டா செடர். பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ராண்டா செடர், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற இளம் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். ராண்டா சேடரின் தந்தை 5 வயதிலேயே அவருக்கு சதுரங்கத்தை கற்பிக்கத் தொடங்கியுள்ளார். அவரது தாயும் சதுரங்க விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்ததால் தற்போது அதுவே அவரது வாழ்க்கையாக மாறியுள்ளது.
8 வயதில் பாலஸ்தீன் நாட்டு செஸ் வீராங்கனை!
ராண்டா சேடர் பல்வேறு செஸ் தொடர்களில் பங்கேற்றுள்ளார். பாலஸ்தீனத்தில் நடைபெற்ற மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் 2வது இடத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டிற்கான செஸ் ஒலிம்பியாட் அணிக்கு ராண்டா சாடர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று போட்டியின்போது தனது அணியை எட்டு வயது சிறுமியான ராண்டா சாடர் எதிர்பாராதவிதமாக தவறவிட்டார்.
பாலஸ்தீனத்தில் செஸ் விளையாடுவது கூட கடினமே:
நட்சத்திர விடுதியில் சுற்றித் திரிந்த ராண்டாவை பெண் தன்னார்வலர் ஒருவர் அழைத்து கொண்டு பாலஸ்தீன அணி வீராங்கனைகளை தேடினார். 20 நிமிடமாக தேடிய பின்னர் சிறுமி ராண்டா சேடர் தனது அணியின் சக வீராங்கனைகளை சந்தித்தார். 8 வயது சிறுமி தனது சக வீராங்கனைகளை பார்த்தவுடன் துள்ளி சென்று ஆரத் தழுவினார். அது அங்கிருந்த பலரை நெகிழ்ச்சி அடைய வைத்தது. பாலஸ்தீனத்தில் நிம்மதியாக சதுரங்க போட்டி விளையாடுவது கூட கடினமாக ஒன்றாக இருப்பதாக பாலஸ்தீனத்தை சேர்ந்த ஈமான் சவான் தெரிவித்தார்.
பாலஸ்தீனத்தில் இருந்து ஒரு ஓபன் அணியும் ஒரு மகளிர் அணியும் பங்கு பெற்றுள்ள நிலையில் ஓபன் அணியின் கேப்டனாக இருக்கிறார் ராண்டா செடரின் தந்தையான நாஜி சீகர். மௌனப் போராக நடைபெறும் சதுரங்க விளையாட்டை பாலஸ்தீனத்தில் துப்பாக்கி மற்றும் பீரங்கி சத்தத்திற்கு இடையே விளையாடி பயிற்சி பெற்று வருவதாக அந்நாட்டு வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM