சி.இ.டி., தேர்வு முடிவுகள் வெளியீடு ஆகஸ்ட் 5 முதல் ஆவணங்கள் பரிசீலனை| Dinamalar

பெங்களூரு, : பொறியியல் உட்பட உயர்படிப்புகளுக்கு நடத்தப்பட்ட சி.இ.டி., எனும் பொது நுழைவு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ஆவணங்கள் பரிசீலனை ஆரம்பமாகிறது. செப்டம்பர் முதல் வாரத்தில் கலந்துரையாடல் நடக்க உள்ளது.கர்நாடகாவில் பொறியியல், பி.எஸ்.டி., விவசாயம், பி.பாரம் உட்பட பல்வேறு உயர் படிப்புகளுக்கு, பி.யு.சி.,க்கு பின், சி.இ.டி., எனும் பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.

இந்தாண்டிற்கான சி.இ.டி., தேர்வு ஜூன் 16, 17, 18 ஆகிய நாட்களில், 486 மையங்களில் நடந்தது. இரண்டு லட்சத்து 16 ஆயிரத்து 559 மாணவ – மாணவியர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இதில், இரண்டு லட்சத்து 10 ஆயிரத்து 829 பேர் தேர்வு எழுதினர்.விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்த நிலையில், நேற்று சி.இ.டி., தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கர்நாடக தேர்வு ஆணைய அலுவலகத்தில், முடிவுகளை வெளியிட்டு, உயர்கல்வி துறை அமைச்சர் அஸ்வத் நாராயணா கூறியதாவது:மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் எனும் தர வரிசை வழங்கப்பட்டுள்ளது. பொறியியல் பாடத்துக்கு ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 656 பேரும்; விவசாய பாடத்துக்கு ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 968 பேரும்;கால்நடை பாடத்துக்கு, ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 820 பேரும்; யோகா மற்றும் நேச்சுரோபதி பாடங்களுக்கு ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 750 பேரும்; பி.பார்ம் மற்றும் டி.பார்ம் பாடங்களுக்கு ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 568 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகள் http://kea.kar.nic.in, http://karresults.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. சமூக வாரியங்களாக இட ஒதுக்கீடுபடி தர வரிசை பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.தர வரிசை வழங்கப்படாத மாணவர்கள், தேர்வு ஹால் டிக்கெட்டை, keauthority–[email protected] என்ற இ – மெயில் முகவரிக்கு அனுப்பலாம். நேரில் வந்து பெற்று கொள்ளலாம்.தர வரிசை வழங்கியவுடன், கல்லுாரிகளில் சேருவதற்கு இடம் கிடைத்ததாக கருத கூடாது. ஆவணங்கள் பரிசீலனைக்கு பின் கல்லுாரிகளில் இடம் ஒதுக்கப்படும். ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ஆவணங்கள் பரிசீலனை ஆரம்பிக்கப்படும்.

செப்டம்பர் முதல் வாரத்தில் கலந்துரையாடல் நடக்கும்.நீட் தேர்வு முடிவுகள் வந்த பின், மருத்துவம், பல் பருத்துவம், ஹோமியோபதி, இந்திய மருத்துவ முறை ஆகிய படிப்புகளுக்கும்; நாடா தேர்வு முடிவுக்கு பின், ஆர்கிடெக்சர் படிப்புக்கு சேர தர வரிசை வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.கேள்விகள் குளறுபடி காரணமாக, கணிதத்தில் 5, இயற்பியல், வேதியியல் பாடங்களில் தலா ஒரு மதிப்பெண் என அனைத்து மாணவர்களுக்கும், 7 மதிப்பெண் கூடுதலாக வழங்கப்பட்டது.இதற்கிடையில், தர வரிசை பட்டியில் குளறுபடி உள்ளதாகவும், சரியாக வழங்கும்படியும் வலியுறுத்தி திரளான பெற்றோர், மாணவர்கள் மல்லேஸ்வரம் கர்நாடக தேர்வு ஆணைய அலுவலகம் முன் நேற்று மாலை தர்ணாவில் ஈடுபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.