ஜோதி விமர்சனம்: சீரியல் கில்லர் படங்கள் தெரியும்… ஆனால் இது `சீரியல்' த்ரில்லர் படம்!

மோசமான கருத்தை நல்ல மேக்கிங்கில் சொல்லும் படங்கள் சில. நல்ல கருத்தை மோசமான மேக்கிங்கில் சொல்லும் படங்கள் சில. இதில் `ஜோதி’ இரண்டாவது வகை.

நிறைமாத கர்ப்பிணியான ஷீலா ராஜ்குமார் வீட்டில் தனித்திருக்கும்போது ஒரு மர்ம நபரால் தாக்கப்படுகிறார். சத்தம் கேட்டு பக்கத்துவீட்டில் வசிக்கும் க்ரிஷா குரூப் வந்து பார்க்கும்போது ஷீலா ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். அவருக்கு அவசர அவசரமாக சிசேரியன் செய்யப்பட்டு பச்சிளம் குழந்தையைக் குழந்தையைக் கடத்தியிருப்பது தெரிய வருகிறது. உடனே க்ரிஷா தன் கணவரான ஹீரோ வெற்றிக்கு போன் செய்ய, எஸ்.ஐயான வெற்றி இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்குகிறார். விறுவிறுப்பாய் இப்படித் தொடங்கும் கதை மேலும் மேலும் பதற்றத்திற்குள்ளாக்கும் என நீங்கள் நினைத்தால்… வீ ஆர் ஸாரி. ப்ரைம் டைமில் வெளியாகும் சீரியல் போல அநாவசியமான காட்சிகள், உணர்ச்சிகளே கடத்தப்படாத சென்டிமென்ட் என எங்கெங்கோ சுற்றி முடிகிறது கதை.

ஜோதி விமர்சனம்

ஹீரோவாய் வெற்றி. இறுக்கமான காட்சியமைப்புகளில் அவரின் முக உணர்ச்சிகள் செட்டாகின்றன. ஆனால் படம் முழுக்க கொஞ்சமும் வெரைட்டி காட்டாமல் அப்படியே வருவது ஏனோ? இன்னொருபுறம் இவருக்குப் போட்டியாகக் குழந்தையைத் தொலைத்த தந்தையான ‘ராட்சஷன்’ சரவணனும், ‘எனக்கு இவ்வளவுதான் வரும்’ என்கிற மோடிலேயே நடுநடுவே வந்து போகிறார். ‘அவங்க இல்லனா என்ன, நான் பண்றேன் பாருங்க’ என ஷீலா ராஜ்குமார் மூவருக்குமாய் சேர்த்து மிகை நடிப்பில் பொங்கித் தள்ள நம்மால் ஒரு இடத்தில் கூட படத்தோடு ஒன்றிப் போக முடியவில்லை.

மைம் கோபி ஒருவர் மட்டுமே தன் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதைச் சரியாய்ச் செய்துவிட்டுப் போகிறார். இன்னபிற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மற்றவர்கள் மெயின் கேரக்டர்களில் நடித்திருப்பவர்களுக்கு `போட்டியாக’ திறனை வெளிக்காட்ட, படம் தள்ளாடுகிறது.

சமூக அவலத்தைப் படமாய் எடுக்கவேண்டும் என இயக்குநர் நினைத்தது சரிதான். ஆனால் சமூகப் பொறுப்போடு சேர்த்து கொஞ்சம் கதை மீதான பொறுப்பையும் ஏற்றிருக்கலாம். துண்டாடப்பட்ட திரைக்கதை நம்மை ரொம்பவே சோதிக்கிறது. காவல்துறை விசாரிக்க விசாரிக்கப் புதிது புதிதாய் கேரக்டர்கள் க்ளைமாக்ஸ் வரை அறிமுகமாகிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கிளைக்கதைகள் வேறு. ஆனால் மில்லிகிராம் அளவிலான விறுவிறுப்பு கூட எதிலும் இல்லை. ‘அதிக பிளாஷ்பேக்குகள் கொண்ட தமிழ்ப்படம்’ எனக் கணக்கெடுத்து பட்டம் கொடுக்குமளவிற்கான திரைக்கதை. நல்லவேளையாகக் கடத்தப்பட்ட குழந்தை பிறந்து ஒருநாளே ஆகியிருப்பதால் அதற்கு மட்டும் பிளாஷ்பேக்கிற்கான வெளி இல்லை.

ஜோதி விமர்சனம்

வழக்கமாய் நடிகர்கள் சொதப்பும்போது தொழில்நுட்ப குழுவின் உழைப்பு படத்தை ஓரளவிற்குத் தாங்கி நிற்கும். ஆனால் இந்தப் படத்தில் அவர்களும் தங்கள் பங்கிற்குச் சோதிக்கிறார்கள். முக்கியமாய் ஹர்ஷவர்தன் பரமேஸ்வரின் இசை. பாடல்கள் எல்லாமே எளிதில் மறந்துவிடக்கூடிய ரகம். அதனால்தானோ என்னமோ தன் பெயரை யாரும் மறந்துவிடக்கூடாது என்பதற்காகப் பின்னணி இசையில் முத்திரையை ‘அழுத்த்த்த்தமாக’ பதித்திருக்கிறார். இரைச்சலையும் தாண்டிய மீட்டரில் பின்னணி இசை இரண்டு மணிநேரங்கள் ஒலிக்க, படம் முடிந்து வெளியே வந்தபின்னரும் இரவெல்லாம் அது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

செசிஜயாவின் ஒளிப்பதிவு ஓகே ரகம். அத்தனை கிளைக்கதைகளையும் அயர்ச்சியே இல்லாமல் கோத்து நம்மை அயர்ச்சிக்குள்ளாக்குகிறது சத்யமூர்த்தியின் படத்தொகுப்பு.

ஜோதி விமர்சனம்

இறுதியாய் வரும் ட்விஸ்ட் நிஜமாகவே ட்விஸ்ட்தான். ஆனால் அது பதிவு செய்யப்பட்ட விதத்தில் அநியாயத்திற்கு நாடகத்தன்மை. குற்றவாளி யார் எனத் தெரிந்தபின்பு பழக்க தோஷத்தில் மறுபடியும் ஒரு பிளாஷ்பேக், எண்ட் க்ரெடிட் என முடியவிடாமல் இழுத்தடிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் பழங்கால பாணியில் சாமி சிலையின் முன் உக்கிரமாக ஆடி கோபத்தைக் கொட்டித் தீர்க்கிறார் நாயகி. அது படமாக்கப்பட்ட விதத்தில் மிகை நடிப்பும், செயற்கைத்தனமும் போட்டிப் போடுகின்றன.

சீரியல் கில்லர் படங்களைப் போல `சீரியல்’ த்ரில்லர் படம் இந்த `ஜோதி’.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.