செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் விளையாடிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்!| Dinamalar

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்வதில் பிரதமர் படம் விடுபட்டதற்கும், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த விளம்பர நிறுவனங்களுக்கு விளம்பரம் கொடுத்ததற்கும் முக்கியமான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தான் காரணமென்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்துக்கே பெருமை சேர்க்கும் வகையில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி, சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததற்காக, தமிழக அரசை பிரதமரும் பாராட்டி உள்ளார்.

செலவு விபரங்கள்

இந்நிகழ்ச்சி, மத்திய அரசுடன், தமிழக அரசுக்கு இருந்த மோதல் போக்கை மாற்றி, சுமுகமான உறவை ஏற்படுத்தியுள்ளதாக பல தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.இந்த விளையாட்டு போட்டிக்காக, தமிழக அரசின் செலவு விபரங்கள் தெரியவில்லை.ஆனால், இதை உலகளவில், குறிப்பாக இந்திய அளவில் விளம்பரப் படுத்துவதற்காக பல நுாறு கோடி ரூபாயை தமிழக அரசு செலவிட்டுள்ளது.
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை தான் விளம்பரங்கள் செய்வது, ஊடகங்களுக்கு செய்திகள் பகிர்வது போன்ற பணிகளை மேற்கொண்டுள்ளது.இதில், விளம்பர நிறுவனங்களை தேர்வு செய்ததிலும், விளம்பரங்களை வடிவமைத்ததிலும் முக்கியமான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தங்கள் இஷ்டம்போல விளையாடியிருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர்கள் சிலர் கூறியதாவது:செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு போஸ்டர்கள், பேனர்கள், அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என, எல்லாவற்றிலும் விளம்பரம் செய்யும் பணி, முக்கியமான நான்கு விளம்பர நிறுவனங்களுக்கு பிரித்துத் தரப்பட்டுள்ளது.
இவற்றில் ஒரு விளம்பர நிறுவனம், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நெருக்கமாகவும், ஸ்டாலினுக்கு துாரமாகவும் இருக்கும், சினிமா தொடர்புடைய பிரபலம் ஒருவரின் தம்பி நிறுவனமாகும்.முதல்வருக்கு முற்றிலும் பிடிக்காது என்று தெரிந்தும், இந்த நிறுவனத்துக்கு விளம்பரப் பொறுப்பு தரப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த கோவை, ‘மாஜி’யின் சகோதரர் மகன், ‘மாஜி’ அமைச்சர்கள் இருவர், செய்தித்துறையைக் கையாண்ட ‘மாஜி’ அமைச்சர் ஆகியோர் நடத்தும் மூன்று விளம்பர நிறுவனங்கள் வாயிலாகவே, பல கோடி ரூபாய்க்கு விளம்பரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விளம்பரங்கள் கொடுத்ததற்காக செய்தித்துறையில் உள்ள முக்கிய அதிகாரியையும், இந்த மூன்று நிறுவனங்கள் நன்றாக கவனித்துள்ளன என, பல மாவட்ட பி.ஆர்.ஓ., அலுவலகங்களில் பேசப்பட்டு வருகிறது.
மற்றொரு, ‘மாஜி’ அமைச்சரின் பினாமி விளம்பர நிறுவனத்துக்கு, செய்தித்துறை வரலாற்றிலேயே இல்லாத வகையில், அரசு விளம்பரத்துக்காக பல லட்சம் ரூபாய் ‘அட்வான்ஸ்’ தொகையாக விடுவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, இப்படி ‘அட்வான்ஸ்’ தருவது வழக்கத்தில் இல்லை.முதல்வர் ஆய்வு செய்தாலே இந்த உண்மை தெரியவரும்.
ஏற்கனவே, அ.தி.மு.க., ஆட்சியில் அப்போதிருந்த அமைச்சர்கள் பலருக்கும் மிகவும் நெருக்கமாக இருந்த பி.ஆர்.ஓ.,க்களையே, இப்போதும் முக்கியமான பணிகளிலும், மாவட்டங்களிலும் பணியமர்த்தியுள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், இப்போதும் அ.தி.மு.க., ‘மாஜி’க்களின் பினாமி நிறுவனங்களுக்கு விளம்பரங்களை வாரியிறைத்து தன் விசுவாசத்தை காண்பித்து உள்ளனர்.
முதல்வருக்கு மிக நெருக்கமாகவுள்ள முக்கியமான ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் ஆதரவு காரணமாக, இவராகவே பல முடிவுகளை எடுக்கிறார். எதற்கெடுத்தாலும் முதல்வருக்கு மிகவும் நெருக்கமாக உள்ள அந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் பெயரையும், துாத்துக்குடியில் முன் பணியாற்றிய பழக்கத்தை வைத்து, தி.மு.க., பெண் வாரிசு தலைவரின் பெயரையும் அடிக்கடி பயன்படுத்துகிறார்.

அதிகாரிகள் வட்டாரம்

செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் படம் இடம் பெறாததும், முதல்வருக்குத் தெரியாது. அதில் பிரதமர் பெயரை தவிர்க்கும் முடிவையும், இந்த இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்தான் அவர்களாகவே எடுத்துள்ளனர். மத்திய அரசுடன் தமிழக அரசுக்கு மோதல் அதிகரிக்கவும் இவர்கள்இருவரும் முக்கியக் காரணமாக உள்ளனர் என்கின்றனர், மாவட்ட பி.ஆர்.ஓ.,க்கள்.
மேற்கண்ட தகவல்கள் தமிழக முதல்வருக்கு தற்போது தெரியவந்துள்ளதாகவும், அதன் எதிரொலியாக வேறு நல்ல அதிகாரிகளை தேர்வு செய்து, செய்தித் துறையை சுத்தம் செய்ய முதல்வர் முடிவு செய்துள்ளதாகவும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது.
நிழற்குடைக்குள் காசு மழை ; செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களை, நுாற்றுக்கணக்கான பயணியர் நிழற்குடைகளில் விளம்பரம் செய்வதற்கு, அ.தி.மு.க., ‘மாஜி’யின் பினாமி நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய்க்கு விளம்பரம் தரப்பட்டுள்ளது.
ஆனால், கணக்கில் காட்டியதில், 25 சதவீத எண்ணிக்கையில் உள்ள பயணியர் நிழற்குடைகளில் கூட, விளம்பரம் அமைக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. ஒரே நிழற்குடையை பல கோணங்களில் படமெடுத்து, நுாற்றுக்கணக்கில் வைத்திருப்பதாகக் கணக்கும் காண்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்புகார் உண்மையா என தெரியவில்லை; இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மைத் தன்மை தெரியவரும்.

– நமது சிறப்பு நிருபர் –

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.