நான் துரோகி என்றால் நீங்கள் யார்? ஏக்நாத் ஷிண்டே சரமாரி கேள்வி!

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மாநிலத்தை விட்டு வெளியேறினர். இதனால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை உத்தவ் தாக்கரே நிரூபிக்குமாறு மாநில ஆளுநர் பிகத் சிங் கோஷியாரி உத்தரவிட்டார். இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

இதையடுத்து, உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவிசும் பொறுப்பேற்றனர். நம்பிக்கை வாக்கெடுப்பிலும் ஏக்நாத் ஷிண்டே வெற்றி பெற்றுள்ளார். பாஜக ஆதரவுடன் முதல்வராகியுள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியினர் சிவசேனாவை கைபற்றும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இருந்தபோதும், ஏக்நாத் ஷிண்டே அணியினர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக பேசாமல் இருந்து வந்தனர். விமர்சனங்களை தாங்களும் முன்வைக்காமல், பாஜகவினரும் கூட விமர்சிக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேவை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாசிக் மாவட்டம் மாலேகாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஏக்நாத் ஷிண்டே, “சிலரை போல நான் ஆண்டுதோறும் விடுமுறைக்கு வெளிநாடு செல்வதில்லை. சிவசேனாவும், அதன் வளர்ச்சியும் மட்டுமே எனது மனதில் உள்ளது. பால்தாக்கரே மருமகள் ஸ்மிதா தாக்கரே, பேரன் நிகார் தாக்கரே எனக்கு ஆதரவு அளித்து உள்ளனர். எங்களை துரோகிகள் என கூறுகிறீர்கள், முதல்வர் பதவிக்காக பால்தாக்கரேவின் கொள்கையை சமரசம் செய்த உங்களை நாங்கள் எப்படி அழைப்பது?” என்று கேள்வி எழுப்பினார்.

நீங்கள் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டீர்கள் என்று சுட்டிக்காட்டிய ஏக்நாத் ஷிண்டே, “காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து முதல்வரானீர்கள். இது துரோகம் இல்லையா” என்றும் கேள்வி எழுப்பினார். அடுத்த சட்டமன்ற தேர்தலில் தனது தலைமையிலான சிவசேனா, பாஜக கூட்டணி 288 தொகுதிகளில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் அப்போது அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

விபத்தில் மரணம் அடைந்த சிவசேனா மூத்த தலைவர் தர்மவீர் ஆனந்த் திகேவுக்கு என்ன நடந்தது என்று தனக்கு தெரியும் எனவும், தான் பேசினால் பூகம்பம் வெடிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஏக்நாத் ஷிண்டே பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.