`உதயநிதியைப் பாராட்டிய ரஜினி முதல் முகம் சிவந்த அமைச்சர் வரை!' – கழுகார் அப்டேட்ஸ்

ட்ரீட்மென்ட் புள்ளியின் வலதுகரமாக அறியப்பட்ட அகிம்சைப் புள்ளி எடப்பாடி அணிக்குத் தாவியதிலிருந்து, அவருக்கு மறைமுக மிரட்டல் வந்துகொண்டிருக்கிறதாம். ட்ரீட்மென்ட் புள்ளியின் சம்பந்தி தரப்பினர், ‘அகிம்சை மட்டும் நம்ம ஊருக்குள்ள வரட்டும் பார்த்துக்கிறோம்…’ என்று வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்கள். இதனால் அவர் ஒரத்தநாடு பகுதியைக் கடந்து செல்லும்போது தன் காரில் செல்லாமல், பாதுகாப்புக்காக வேறொரு காரில் சென்றுகொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அகிம்சைப் புள்ளி பொங்கியெழுந்துவிட்டாராம். ‘இப்படியே எனக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தால் ட்ரீட்மென்ட் புள்ளியின் சொத்து விவரங்களையும், அவர் குறித்த ரகசியங்களையும் அம்பலப்படுத்திவிடுவேன்’ என்று பதில் மிரட்டல் விடுக்கத் தொடங்கியிருக்கிறார் அகிம்சை.

கருணாநிதி சிலை

மலை மாவட்டத்தின் பெரிய அதிகாரி, தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்போலவே செயல்பட்டுவருகிறார் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். மாவட்ட அமைச்சரின் வாரிசு பங்கேற்கும் நிகழ்ச்சிகளில்கூட கலந்துகொள்கிறாராம் அந்த அதிகாரி. இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில், சமீபத்தில் ஒரு நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. அந்த ஊரில் சமீபத்தில் திறக்கப்பட்ட கருணாநிதி சிலை அருகே, தினம் ஒரு தி.மு.க அணி சார்பில் அன்னதானம் நடக்கிறது. இப்படி, கடந்த 25-ம் தேதி நடந்த அன்னதானத்துக்குச் சென்ற மாவட்ட அதிகாரி கருணாநிதி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதுடன், அன்னதானத்திலும் பங்கேற்றிருக்கிறார். ‘இவர் அரசு அதிகாரியா… இல்லை தி.மு.க உடன்பிறப்பா..?’ என்று புலம்புகிறார்கள் மாவட்ட மக்கள்.

தி.மு.க-அண்ணா அறிவாலயம்

மேற்கிலுள்ள தொழில் மாவட்டம் ஒன்றுக்குப் பொறுப்பாளராகச் சென்ற அணில் அமைச்சர், ஒட்டுமொத்த மாவட்டத்தையும் தனது கன்ட்ரோலுக்குக் கொண்டுவந்துவிட்டாராம். ஏற்கெனவே உள்ளாட்சித் தேர்தலின்போது, தன் சொந்த ஊரிலிருந்து ஒரு பெரும் படையை இறக்கியிருந்தவர், இப்போது மீண்டும் ஒரு படையை களமிறக்கியிருக்கிறாராம். அவர்களில் பலரும் கரூரில் ஃபைனான்ஸ் தொழில் செய்துவருபவர்களாம். வார்டுக்கு இரண்டு நபர்களாகப் பிரிந்து, லோக்கலிலுள்ள தொழிலதிபர்களுக்கு ஃபைனான்ஸ்களை அள்ளிக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். “கட்சி நடத்த வந்தாரா… கந்துவட்டி பிஸினஸ் பண்ண வந்தாரா?” என்று கடுகடுக்கிறார்கள் லோக்கல் தி.மு.க-வினர்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஜூலை 28-ம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி. முன் வரிசையில் நடிகர் ரஜினிகாந்த, உதயநிதி ஸ்டாலின், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா, கனிமொழி, துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். உதயநிதியும், ரஜினியும் அருகருகே அமர்ந்து அவ்வப்போது சிரித்து சிரித்துப் பேசிக்கொண்டே இருந்தனர். அப்படி என்ன பேசினார்கள் என்று உதயநிதி வட்டாரத்தில் விசாரித்தபோது, “தியேட்டர்களைக் கையில் வைத்திருப்பதன் மூலம், முக்கியமான தமிழ்ப் படங்களையும், தோல்வியடையக்கூடும் என்று கணிக்கப்பட்ட படங்களையும்கூட உதயநிதியின் ‘ரெட் ஜெயன்ட்’ நிறுவனம் வாங்கி ரிலீஸ் செய்வதை ரஜினி பாராட்டினார்.

ரஜினி மற்றும் உதயநிதி

ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜெயிலர்’ படத்தையும் உதயநிதி மூலம் ரிலீஸ் செய்வதற்கு ரஜினி ஆர்வமாக இருக்கிறார்” என்றனர். “கடந்த 2006-11 வரையிலான கருணாநிதி ஆட்சியில், ‘எங்களை மிரட்டுகிறார்கள்’ என்று மேடையிலேயே புலம்பிய அஜித் பேச்சுக்கு எழுந்து நின்று கைதட்டிய ரஜினியா, திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் உதயநிதியைப் புகழ்ந்தார்… நம்ப முடியவில்லையே?” என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம்தான் அமைச்சர் சிவசங்கரின் தொகுதி. கடந்த சில வாரங்களாக அங்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துவருகிறார் அமைச்சர். பிலிமிசை, வடக்கு மாதவி பகுதிகளில் அவர் நன்றி தெரிவிக்கச் சென்றபோது, கிராம மக்கள் அவரை முற்றுகையிட்டு, ‘மருதையாற்றில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் வடிகால் வசதி இல்லாத பிரச்னை’ குறித்து முறையிட்டனர்.

அமைச்சர் சிவசங்கர்.

அதைச் சரிசெய்து கொடுப்பதாக உத்தரவாதம் கொடுத்தார் அமைச்சர். ஆனால், ‘இப்படித்தான், தேர்தல் பிரசாரத்தின்போது குடிநீர்ப் பிரச்னையைத் தீர்ப்பதாக உத்தரவாதம் கொடுத்தீங்க. அது என்னாச்சு… இத்தனை மாசமா எங்க ஊர்ப்பக்கமே வராதது ஏன்?’ என்று சரமாரிக் கேள்விகளால் அமைச்சரைத் துளைத்தெடுத்துவிட்டார்கள் மக்கள். பதில் பேச முடியாத அமைச்சர் முகம் சிவந்தபடியே அவசர அவசரமாகக் காரில் ஏறிச்சென்றுவிட்டாராம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.