டெல்லியில் நேற்று மின்சக்தி பயன்பாடு பற்றிய ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “இன்றைய காலகட்டத்தில், மின்சாரம் இல்லாத வாழ்க்கையை யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது. கடந்த சில ஆண்டுகளில், எரிசக்தி துறையில் இருந்த பல குறைபாடுகளை நீக்கி, மின் துறையை பலப்படுத்தியிருப்பது எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது அரசாங்கம் நாட்டின் மின் துறையின் ஒவ்வொரு பகுதியையும் மாற்றுவதற்கான முயற்சியை எடுத்தது.
நாட்டின் மின் துறையை மேம்படுத்துவதற்காக உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் மற்றும் இணைப்பு ஆகியவற்றில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை வலுப்படுத்த எரிசக்தி மற்றும் மின் துறை முக்கிய பங்கு வகிக்கும். மாநில அரசுகள் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு 75,000 கோடி ரூபாய் மானியம் வழங்காதது வருத்தத்தை அளிக்கிறது. மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய சுமார் ரூ.2.5 லட்சம் கோடி நிலுவைத் தொகையை மாநில அரசுகள் விரைந்து வழங்க வேண்டும். இது அரசியலுக்கான நேரம் அல்ல, இது ஒரு தேசிய கொள்கைக்கான நேரம்” என்றார்.