நாட்டிலேயே அதிகபட்ச நன்கொடை பெறும் மாநிலக் கட்சிகளின் பட்டியலில் திமுக இரண்டாமிடத்தில் உள்ளது.
கடந்த 2020-21 ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையத்தில் அந்தந்த கட்சிகள் தாக்கல் செய்த நன்கொடை தகவல் அடிப்படையில், ஜனநாயக சீர்திருத்த சங்கம்
ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநில கட்சிகளில் பீகாரைச் சேர்ந்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு அந்த ஆண்டில், 60 கோடியே 15 லட்சம் ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. 58 கார்ப்ரேட் மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து 59 கோடியே 24 லட்சம் ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளதாகவும், 272 தனிநபர்களிடமிருந்து 90 லட்சம் ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளதாகவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.
இதன்மூலம், மாநிலக் கட்சிகளிலேயே அதிகபட்ச நன்கொடை பெற்ற கட்சியாக ஐக்கிய ஜனதா தளம் உள்ளது. அடுத்ததாக, திமுகவிற்கு 33 கோடியே 99 லட்சம் ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. நாட்டில் உள்ள 54 மாநிலக் கட்சிகளில், அதிக நன்கொடை பெறும் இரண்டாவது கட்சியாக திமுக விளங்குகிறது. டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி 11.32 கோடி ரூபாய் நன்கொடையுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 4.16 கோடி ரூபாயுடனும், தெலங்கானா ராஷ்ட்ரீய சமீதி 4.15 கோடி ரூபாயுடனும் 4வது மற்றும் 5வது இடங்களை பிடித்துள்ளன. ஒட்டுமொத்தமாக 207 கார்ப்ரேட் மற்றும் தொழில் நிறுவனங்கள் மாநிலக் கட்சிகளுக்கு 95 கோடியே 45 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளன. 2,569 தனி நபர்கள் 25 கோடியே 57 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியிருப்பதும் இந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM