செஸ் ஒலிம்பியாட்:
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை, மாமல்லபுரத்தில் ஜூலை 28-ம் தேதி தொடங்கிய 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்தப் போட்டியில் 185-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2,000-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் பங்கேற்கிறார்கள். தமிழ்நாடு அரசு சார்பில் 18 குழுக்கள் இந்த விழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைக் கவனித்துவருகின்றன.
இந்த விழாவுக்காகச் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை அழகுபடுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. விமான நிலையம் அருகே பசுமை பூங்கா அமைத்தல், வணக்கம் சென்னை பதாகை, கிழக்கு கடற்கரைச் சாலை அழகுபடுத்தும் பணி, தடுப்புச்சுவர் பழுதுபார்த்தால், வண்ணம் பூசுதல் எனப் பல்வேறு பணிகள் மிகக் குறுகிய காலகட்டத்திலேயே செய்து முடிக்கப்பட்டிருக்கின்றன.
சிறப்பான வரவேற்பு:
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள வந்திருக்கும் வெளிநாட்டு வீரர்கள், `போட்டிகளில் விளையாட நாங்கள் எத்தனையோ நாடுகளுக்குச் சென்றிருக்கின்றோம். ஆனால், இங்கு அளிக்கப்பட்டது போன்ற சிறப்பான ஏற்பாட்டையும், வரவேற்பையும் பார்த்தது கிடையாது’ என்று கூறியுள்ளனர். பிரதமர் மோடியும், `மிகக் குறுகிய காலத்திலேயே செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறது’ என்று பாராட்டிப் பேசியிருந்தார்.
உண்மையில் ஒரு சர்வதேச போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்துமுடிக்க, 18 மாதங்களாவது தேவைப்படும் என்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு அரசு இந்த மொத்த ஏற்பாடுகளை மூன்று மாதங்களுக்குள் செய்து முடித்திருப்பது அனைத்து தரப்பினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷ்யாவில் நடைபெறுவதாக இருந்தது. பல்வேறு காரணங்களினால் அந்த போட்டி அங்கு நடைபெறவில்லை. இந்தியாவில் நடைபெறுவதற்கான ஆலோசனை நடந்தபோது, தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தீவிரம் காட்டிய தமிழ்நாடு அரசு:!
பன்னாட்டு அளவிலான ஒரு போட்டி தமிழ்நாட்டில் நடைபெறுவது, சர்வதேச அரங்கில் தமிழ்நாட்டுக்கு பெரும் பெருமையைச் சேர்க்கும் என்பதினால், அரசு இந்த போட்டியைச் சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்று முதல்வர் பணிகளை முடுக்கி விட்டார். அரங்கம் அமைப்பது முதல் வரவேற்பு, சாலை மேம்படுத்துதல், வீரர்கள் தங்குமிடம், உணவு என்று ஒவ்வொரு செயலையும் அந்த துறை சார்ந்த செயலாளர்கள் முன்னின்று நடத்தவேண்டும் என்று மொத்தம் 18 குழுக்கள் அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேற்கொள்ளப்படும் பணிகளை துறைசார் அமைச்சர்களும் தொடர்ந்து பார்வையிட்டனர். போட்டி நடக்கும் அரங்க ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை சாலைகளின் இரண்டு புறங்களையும் அழகுபடுத்தும் பணி இன்னொரு பக்கம் தீவிரமாக நடைபெற்றுவந்தது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காகப் உருவாக்கப்பட்ட பாடல் அனைத்து தரப்பினரிடமும் சென்றடையவில்லை என்பதில் முதல்வருக்குச் சிறிய வருத்தம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், விளையாட்டுத்துறை, செய்தித்துறை விழாவுக்கான தொடக்கவிழா ஏற்பாடுகளை மிக பிரமாண்டமாக நடத்தவேண்டும் என்று இரவு-பகலாக வேலை பார்த்தனர்.
அதிகாரிகளின் அர்ப்பணிப்பு!
திட்டமிட்டபடியே, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் போட்டியின் தொடக்கவிழா மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இந்த விழாவின் அனைத்து கலை நிகழ்ச்சிகளும் பார்ப்பவர்கள் மனம் கவரும் வகையிலிருந்ததாக அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றது. இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அபூர்வா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கே.பி.கார்த்திகேயன் இருவருக்கும் மிக முக்கிய பங்குள்ளது. அடுத்ததாக, சுற்றுலா மற்றும் நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்தூரி வீரர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்துமுடித்திருக்கிறார்.
இவர்களைத் தவிர செய்தித்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரதுறை, சுகாதாரத்துறை என்று பல்வேறு துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றியதே இந்த விழா சிறப்பாக முடிந்ததற்கு முக்கிய கரணம் என்று கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, காவல்துறை சார்பில் பிரதமருக்கு ஏழடுக்கு பாதுகாப்பு முதல் போட்டி நடைபெறும் இடம் வரை உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒலிம்பிக் போட்டிக்கு நிகராக கருதப்படும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதன்முறை. அதுவும் இந்த போட்டி தமிழ்நாட்டில் நடைபெறுவது மாநிலத்துக்கே பெரும் பெருமை. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை மிகக் குறுகிய காலத்தில் சிறப்பாகச் செய்துமுடித்துள்ள தமிழ்நாடு அரசையும், அதற்காகக் கடுமையாக உழைத்த அரசு அதிகாரிகளையும் கண்டிப்பாகப் பாராட்டியே ஆகவேண்டும்.