பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி; அமெரிக்க உதவியை நாடியது

லாகூர்,

ஆசிய நாடுகளில் ஒன்றான இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியால் அந்த நாடு மக்களின் போராட்டத்தில் சிக்கி உருக்குலைந்து போயுள்ளது. இறக்குமதி ஆக கூடிய பொருட்களை வாங்க கூட போதிய நிதிவசதி இல்லாத சூழலால், உணவு, எரிபொருள், உரம் உள்ளிட்ட பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இதனால், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளது. கிடைக்கும் பொருட்களையும் கூட வாங்க மக்கள் மணிக்கணக்கில், ஏன் நாள்கணக்கில் கூட நீண்ட வரிசையில் நின்று பெற்று செல்ல கூடிய அவலநிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) அந்நாடு 170 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் நிதியுதவி கோரியுள்ளது என தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரம் பற்றி பாகிஸ்தானின் ராணுவ ஜெனரல் காமர் ஜாவித் பாஜ்வா, அமெரிக்க வெளியுறவு துணை மந்திரி வென்டி ஷெர்மானிடம் பேசியுள்ளார். அமெரிக்காவின் செல்வாக்கை பயன்படுத்தி ஐ.எம்.எப்.பிடம் இருந்து நிதியுதவி பெற்று தரும்படி வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது. தனது நாட்டுக்கான நிதியை பெற்று தரும்படி கேட்டு கொண்டுள்ளது என பாகிஸ்தானின் பல்வேறு அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஏப்ரலில், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் வழியே பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பு வரை அமெரிக்கா, பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் ஏற்பட்டு இருந்தது.

எனினும், பாகிஸ்தான் ராணுவம், அமெரிக்காவுடன் நெருங்கி பணியாற்றி வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, அல்-கொய்தா பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், அமெரிக்காவுடன் அதிகாரப்பூர்வ கூட்டணியாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலோசனை பற்றி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.

இதுபற்றி அந்த அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஆசிம் இப்திகார் கூறும்போது, பேச்சுவார்த்தை நடந்து உள்ளது என உறுதிப்படுத்தினாலும், இந்த நிலையில், ஆலோசனையில் என்ன விசயங்கள் இடம் பெற்றன என்பது பற்றிய விவரங்கள் எனக்கு நேரடியாக தெரியவரவில்லை என கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.